கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு

4

புதுடில்லி: ''டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், '' என போலீசாருக்கு டில்லி கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.


டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் பதவியில் இருந்த போது, அரசுப்பணத்தை வீண் செலவு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பல திட்டங்களுக்காக அளிக்கப்பட்ட பணத்தை அதற்கு செலவழிக்காமல், விளம்பரத்திற்காக செலவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஆம் ஆத்மி மறுத்தது.


இந்நிலையில், பெரிய அளவில் விளம்பரப்பதாகைகள் வைக்க அரசு பணத்தை தவறாக கையாண்டதாக கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கெஜ்ரிவால், முன்னாள் எம்.எல்.ஏ., குலாப் சிங் மற்றும் கவுன்சிலர் நிதிகா ஷர்மா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கடந்த 2019ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


இந்நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அதே கோரிக்கையை முன்வைத்து வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: விளம்பரப் பதாகைகள் வைக்க அரசு பணத்தை தவறாக கையாண்ட விவகாரத்தில் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அது குறித்த அறிக்கையை மார்ச் 18 ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


ஏற்கனவே மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவால், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவினார். ஆம் ஆத்மி கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட வெற்றி பெற முடியவில்லை. இது அக்கட்சிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இச்சூழ்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கெஜ்ரிவாலுக்கு மற்றொரு சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement