'மதிய உணவு திட்டத்துக்கு தாமதமின்றி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை'

பெங்களூரு: ''பள்ளி சிறார்களின் மதிய உணவுக்கு தேவையான சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் தாமதம் ஆகாமல் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்,'' என, மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காப்பா தெரிவித்தார்.

மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் அனில் குமார் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:

பள்ளி சிறார்களின் மதிய உணவுக்கு தேவையான, சமையல் எண்ணெய், பருப்பு உட்பட மற்ற பொருட்கள் வழங்குவது தாமதம் ஆவதாக, எங்களிடம் புகார் எதுவும் வரவில்லை. ஒருவேளை புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி சிறார்களின் மதிய உணவு திட்டத்துக்கு தேவையான நிதியை, மாநில அரசு காலா, காலத்துக்கு சரியாக வழங்குகிறது.

எங்களால் தாமதம் ஆவதில்லை. ஒருவேளை மத்திய அரசிடம் இருந்து வருவது தாமதமானால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, பிரச்னையை சரி செய்வோம்.

சிறார்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க முட்டை, வாழைப்பழம் வழங்கப்படுகிறது. இதுவரை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும், முட்டை, வாழைப்பழம் வழங்கப்பட்டது. இம்முறை பட்ஜெட்டில், முதல்வர் சித்தராமையா, சிறப்பு நிதியுதவி அறிவித்ததால், வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை வழங்கப்படும். ஒரு முட்டை 4.50 ரூபாய் வீதம் கொடுத்து வாங்கப்படுகிறது.

அப்போது இடைமறித்த சில உறுப்பினர்கள், 'இன்றைய நாட்களில் 4.50 ரூபாய்க்கு முட்டை கிடைப்பது கஷ்டம். சில நேரங்களில் ஆறு ரூபாய் கொடுத்தாலும், முட்டை கிடைப்பது இல்லை. சிறார்களுக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்கும் விஷயத்தில், சமரசம் செய்யாதீர்கள். தரமான முட்டை வாங்குங்கள்' என வலியுறுத்தினர்.

அமைச்சர் மது பங்காரப்பா: விரைவில் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும். தரம் விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கூடுதல் தொகை கொடுத்து தரமான முட்டை வாங்கி, சிறார்களுக்கு வழங்குவோம்.

எங்களுக்கு அஜீஸ் பிரேம் ஜி நிதியுதவி வழங்க முன் வந்துள்ளார். எனவே மதிய உணவு திட்டத்துக்கு பண பிரச்னை ஏற்படாது.

Advertisement