கர்நாடகாவில் 4 இடத்தில் நீர் விமான நிலையங்கள்

பெங்களூரு: ''கர்நாடகாவில் கணேஷ்குடி, கபினி அணை, மங்களூரு, சிங்கந்துார் ஆகிய நான்கு இடங்களில் நீர் வழி விமான போக்குவரத்து துவங்க அடையாளம் காணப்பட்டுள்ளது,'' என, கர்நாடகா நீர் போக்குவரத்து வாரிய முதன்மை செயல் அதிகாரி ஜெயராம் ராய்பூர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, நேற்று அவர் கூறியதாவது:
நாட்டில் இலகு ரக நீர் வழி விமான சுற்றுலாவை பிரபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 2022ல் கர்நாடக அரசு, காளி ஆறு, பைந்துார், மல்பே, மங்களூரு, துங்கபத்ரா, கபினி அணை, லிங்கனமக்கி, அலமாட்டி, ஹட்கல் அணை ஆகிய இடங்கள், நீர் வழி விமான போக்குவரத்துக்கு சரியான இடம் என்று தேர்வு செய்தது.
4 இடங்கள்
பல கட்ட ஆலோசனைக்கு பின், உத்தர கன்னடா சுபா அணை அருகில் உள்ள கணேஷ்குடி, மங்களூரு, கபினி அணை, லிங்கனமக்கி அணை அருகில் உள்ள சிக்கந்துார் ஆகிய நான்கு இடங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு 2024ல் கடிதம் எழுதியிருந்தோம்.
'உதான்' திட்டத்தின் கீழ், இந்த நான்கு இடங்களில் அடுத்தாண்டு இறுதிக்குள் நீர் வழி விமான நிலையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் - பொது கூட்டமைப்பில் கட்டப்படும்.
நீர் வழி விமான போக்குவரத்தை துவக்க, 'ஸ்பைஸ் ஜெட்' விமான நிறுவனம் முன்வந்துள்ளது. 2025க்குள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில், 20 வழித்தடங்களில் நீர் வழி விமான போக்குவரத்து துவக்கப்படும்.
கடந்தாண்டு அக்டோபரில், வாரிய நிர்வாக பொறியாளர் தாராநாத் ராத்தோட் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதற்காக, கே.ஆர்.எஸ்., அணையின், 'பேக் வாட்டர்' (உப்பங்கழி) பகுதியான வேணுகோபால் கோவில் அருகிலும், ஆனந்துார் கிராமம் அருகிலும் படகில் சென்று ஆய்வு செய்தனர்.
நவம்பரில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், கே.ஆர்.எஸ்., அணைப்பகுதியில் சோதனை நடத்த முன்வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் முடியவில்லை.
முதலில் மாநிலத்தில், நான்கு நீர் வழி விமான நிலையங்கள் அமைக்கப்படும். இவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதற்கான செலவை மாநில அரசே செய்யும். பின்னர், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை, மாநில அரசுக்கு திருப்பி வழங்கும்.
அனைத்து விமான நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துமாறு, கர்நாடக அரசுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை கடிதம் அனுப்பி உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்