குடியிருப்பு அருகே புதர்; விஷப்பூச்சிகளால் மக்கள் அச்சம்

மீன் இறைச்சி கழிவு



பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் மீன் இறைச்சி கழிவுகளை முறையாக மூடாமல், பிளாஸ்டிக் டிரம்களில் திறந்து வைத்தபடியே வாகனத்தில் ஏற்றி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், மற்ற வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மீன் இறைச்சி கழிவுகளை முறையாக மூடி, கொண்டு செல்ல வேண்டும்.

- டேனியல், பொள்ளாச்சி.

கோவில் நிலத்தில் புதர்



பெரியாக்கவுண்டனூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலம், முறையான பராமரிப்பின்றி அதிகளவு புதர் சூழ்ந்து உள்ளது. இதில் விஷப்பூச்சிகள் அதிகமுள்ளன. எனவே கோவில் நிர்வாகம் சார்பிலோ அல்லது உள்ளாட்சி அமைப்பு சார்பிலோ இந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

-- வெள்ளிங்கிரி, பொள்ளாச்சி.

புதருக்குள் வழிகாட்டி



வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் இருந்து செல்லும் வழியில் இடைச்சோலை அருகே ரோட்டோரத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை புதர் சூழ்ந்து காணப்படுகிறது. புதரை அகற்றி, வழிகாட்டி பலகை பார்வைக்கு தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விபின், வால்பாறை.

நாய்கள் தொல்லை



உடுமலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில், நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால், பஸ் ஸ்டாண்ட் வரும் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கண்ணன், உடுமலை.

மின்கம்பம் பழுது



கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி பகுதியில் தனியார் லே-அவுட் அருகே, பழுதடைந்த மின்கம்பங்கள் ஏராளமாக ரோட்டின் ஓரத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை மின்வாரிய அதிகாரிகள் கவனித்து உடனடியாக ரோட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

- பரணி, கிணத்துக்கடவு.

வேகத்தடையை குறைக்கணும்!



கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில், சீரமைக்கப்பட்ட ரோட்டில் வேகத்தடைகள் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியில் செல்ல சிரமப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வேகத்தடை எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

-- செந்தில், கிணத்துக்கடவு.

குடியிருப்பில் புதர்



உடுமலை, நேரு வீதி எக்ஸ்டன்சன் அருகே குடியிருப்புகளுக்கு அருகே புதர் காடாய் செடிகள் வளர்ந்துள்ளதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புகளில் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும், அப்பகுதியில் குப்பைக்கழிவுகளும் கொட்டப்படுவதால் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது.

- ராணி, உடுமலை.

கொசுத்தொல்லை



கணக்கம்பாளையம், ஜீவா நகர் பகுதியில் அங்கன்வாடி அருகே குப்பைக்கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் குழந்தைகள் பராமரிக்கப்படும் அங்கன்வாடியில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும், குப்பைக்கழிவுகள் குவிந்து கிடப்பதால் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளின் பெற்றோர் முகம் சுழிக்கின்றனர்.

- தனசேகர், கணக்கம்பாளையம்.

ரோட்டை சமப்படுத்தணும்



உடுமலை, பசுபதி வீதியில் பாதாள சாக்கடை கால்வாய் சீரமைக்கும் பணிகளுக்கு குழி தோண்டப்பட்டு, முறையாக சமன் படுத்தப்படாமல் இருப்பதால் ரோடு பள்ளமாகவே உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி விபத்துஏற்படுகிறது. மேலும், மற்ற வாகன ஓட்டுநர்களும் இரவு நேரங்களில் குழியான ரோட்டில் தடுமாறி கீழே விழுகின்றனர்.

- விஜயன், உடுமலை.

Advertisement