500 பேருக்காவது தினமும் மதியம் சாப்பாடு தரணும்!

புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும் 150 பேருக்கு தினமும், மதியம் இலவசமாக தயிர் சாதம் தரும் சென்னை கோட்டூரைச் சேர்ந்த ஸ்ரீகோமதி: சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனையை தினமும் கடக்கும் போதெல்லாம், சிகிச்சைக்காக வருவோரை பார்த்து மனதிற்கு கஷ்டமாக இருக்கும்.
ஒரு நாள் அந்த பக்கமாக வரும்போது, சிகிச்சைக்காக வந்த பாட்டி, 'எங்காவது தயிர் சாதம் கிடைக்குமாம்மா... வயிறெல்லாம் ஒரே எரிச்சலாக இருக்கிறது... சாப்பிட்டும் ரெண்டு நாள் ஆச்சு தாயி'ன்னு சொன்னாங்க.
எனக்கு மனசு உடைந்து விட்டது. 'அஞ்சு நிமிஷம் இருங்கம்மா'ன்னு சொல்லிட்டு, வீட்டுக்கு போய் தயிர் சாதம் எடுத்து வந்து கொடுத்தேன். அந்த அம்மா அப்படியே கட்டிப்பிடித்து கண் கலங்கியது. அந்த கண்ணீர் தான், இந்த வேலையை தொடர்ந்து செய்ய வைத்தது.
பசி கொடுமைன்னா என்னன்னு எனக்கு நல்லா தெரியும். கணவர் இல்லாமல் மூன்று பிள்ளைகளுடன், ஒரு வேளை சாப்பிடவே கஷ்டப்பட்டு இருக்கிறோம். மயிலாப்பூர் கோவிலில் பிரசாதம் வாங்கி வந்து, மூன்று பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்துட்டு, தண்ணீர் குடித்து பல நாட்கள் துாங்கியிருக்கிறேன்.
இந்த மருத்துவமனைக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வருவர். பெரும்பாலும் வசதி வாய்ப்பு இல்லாதோர் தான் வருவர். அதனால், மறுநாளே தயிர் சாதத்துடன் இன்னும் மூன்று பேருக்கு சாப்பாடு எடுத்துச் சென்று கொடுத்தேன். அப்படியே 10 பேர், 20 பேராகி, தற்போது 150 பேருக்கு கொடுத்து வருகிறேன்.
புற்றுநோய் சிகிச்சை எடுப்போருக்கு வயிறு புண்ணாகி இருக்கும். அதற்காக வெண்ணெய் சேர்த்து தயிர் சாதம் செய்வேன். அவர்கள் கூட இருப்போருக்கு கலவை சாதம் செய்து விடுவேன். இதற்காக மாதம் 25,000 ரூபாய் செலவாகும்.
ஒரு சமயம், பெரிய நெருக்கடி. கையில் பணம் இல்லை. எவரிடம் சென்று கேட்கவும் சங்கடமாகவும் இருந்தது. 'ஏதாவது பண்ணுப்பா முருகையா' என்று சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்தபோது, வீட்டு வாசலில் ஒரு வேன், நிறைய மளிகை பொருட்களுடன் நின்று கொண்டிருந்தது. 'ஓ' என, அழுது விட்டேன்.
நான் தினமும் சாப்பாடு கொடுப்பதை, ஆண்டாள் சொக்கலிங்கம் என்பவர் கவனித்து வந்திருக்கிறார். அவர், அவரது நண்பரான பிச்சுமணி சம்பத் என்பவரிடம் கூற, அவர் தான், 30,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை அனுப்பி இருந்தார். அவர் தான், தற்போது வரையும் அனுப்புகிறார். இதுவரை அவரை நான் பார்த்ததில்லை. இதுபோல் முகம் தெரியாத சிலர் ரூபாய் அனுப்புகின்றனர். இதுபோக என் மகன்களின் சம்பளம் வருகிறது.
குறைந்தது, தினமும் 500 பேருக்காவது சாப்பாடு தர வேண்டும். மதியம் மட்டுமல்லாமல், இரண்டு வேளையாக மாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது.
தொடர்புக்கு:87545 13113
மேலும்
-
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் உட்பட இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
-
தவறான தகவல்களால் உண்மைகள் மாறாது: மத்திய அமைச்சருக்கு மகேஷ் பதில்
-
அரசு பள்ளிகளின் இணையவசதிக் கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்த வேண்டுமா; ராமதாஸ் கேள்வி
-
புதுச்சேரியில் இனி மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2500... பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்
-
சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது
-
பயிற்சி டாக்டர்கள் அறையில் கஞ்சா: 3 பேர் கைது