ரன்யா ராவ் வழக்கு; சி.ஐ.டி., விசாரணையை திரும்பப் பெற்றது கர்நாடகா அரசு

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கக்கடத்தல் குறித்த வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு உட்படுத்த கர்நாடகா அரசு பிறப்பித்திருந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
கர்நாடக வீட்டுவசதி கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவின் மகள் நடிகை ரன்யா ராவ், 33. துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கக் கட்டிகள் கடத்திய வழக்கில், கடந்த 3ம் தேதி இரவு ரன்யா ராவை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்து மேலும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரன்யா ராவை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்தது தொடர்பாக, வருவாய் புலனாய்வு பிரிவு கொடுத்த தகவலின்படி, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து உள்ளது.
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் கர்நாடக அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பேச்சு அடிபட ஆரம்பித்து உள்ளது. இது தவிர ரன்யா ராவ் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு 12 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, ரன்யா ராவ் வழக்கை சி.ஐ.டி., விசாரிணைக்கு உத்தரவிட்டு கர்நாடகா அரசு நேற்று (மார்ச் 11) உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், சி.ஐ.டி., விசாரணைக்கு உட்படுத்துவது சரியாகாது என்றும், ஒரு வழக்கில் இரு அமைப்புகள் தலையிட்டு விசாரிப்பது விசாரணையை பாதிக்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.