முதல் சுற்றில் சிந்து 'ஷாக்' * ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில்...

பார்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்தார்.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 16 வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து, 21வது இடத்திலுள்ள தென் கொரியாவின் கா யுன் கிம்மை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21-19 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 13-21 என மோசமாக இழந்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டிலும் ஏமாற்றிய சிந்து 13-21 என கோட்டை விட்டார்.
முடிவில் சிந்து 21-19, 13-21, 13-21 என்ற செட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி, தைவானின் ஹாங் வெய் இ, நிகோல் கொன்சாலஸ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21-10 என வென்ற இந்திய ஜோடி, அடுத்த செட்டை 17-21 என இழந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டை இந்திய ஜோடி 22-20 என போராடி வசப்படுத்தியது.
முடிவில் இந்திய ஜோடி 21-10, 17-21, 22-20 என வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி, தனிஷா ஜோடி, தைவானின் பெய் ஷான், என் ஹாங் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 20-22, 18-21 என போராடி தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியா, ஸ்ருதி ஜோடி 9-21, 4-21 என தென் கொரியாவின் பயக், சோ லீ ஜோடியிடம் தோற்றது.