தமிழக வீரர் ஜோதி மணிகண்டன் 'தங்கம்' * உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில்

புதுடில்லி: உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில் இந்தியாவின் ஜோதி மணிகண்டன் தங்கப்பதக்கம் வென்றார்.
மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப், வரும் செப்டம்பர் மாதம் டில்லியில் நடக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளம், முதன் முறையாக டில்லியில் நடக்கிறது. ஈட்டி எறிதலில் சுமித் அன்டில், உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்காமல் விலகினர்.
நேற்று ஆண்களுக்கான 400 மீ., டி 54 பிரிவு (வீல் சேர்) போட்டியின் பைனல் நடந்தது. இந்தியாவின் ஜோதி மணிகண்டன் ஒரு நிமிடம், 04.56 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த இவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரர் மனோஜ்குமார் சபாபதி (தமிழகம்), ஒரு நிமிடம், 04.85 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இருவர் மட்டுமே பங்கேற்ற பார்வைத்திறன் குறைந்த, பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் லலிதா (ஒரு நிமிடம், 07.59 வினாடி), ஷாலினி (ஒரு நிமிடம், 21.53 வினாடி) தங்கம், வெள்ளி கைப்பற்றினர்.
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் புவி அகர்வால் (ஒரு நிமிடம், 12.08 வினாடி), அஞ்சல் கோயல் (ஒரு நிமிடம், 15.21 வினாடி), இரண்டு, மூன்றாவது இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 400 மீ., டி 4 பிரிவு ஓட்டத்தில் இந்தியாவின் அஞ்சனாபென் (ஒரு நிமிடம், 07.99 வினாடி), வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்கள் 400 மீ., டி 47 ஓட்டத்தில் இந்தியாவின் திலிப் (48.78 வினாடி), ஜஸ்பீர் (49.64), பவிக்குமார் (50.32) முதல் மூன்று இடம் பிடித்தனர். 400 மீ., டி 36 பிரிவு ஓட்டத்தில் இந்திய வீரர் சிராக், ஒரு நிமிடம், 02.58 வினாடி நேரத்தில் வந்து வெண்கல பதக்கம் கைப்பற்றினார்.