ஏரிக்கரையில் வீட்டு மனைகள் கமிஷனர் ஆய்வு
மாடம்பாக்கம், சேலையூரை அடுத்த மாடம்பாக்கம் ஏரியை ஒட்டி, விதிகளுக்கு மாறாக தனியார் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில், இடைவெளியின்றி சுற்றுச்சுவர் எழுப்பப்படுகிறது. இதனால், மழை காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது.
அதனால், மாடம்பாக்கம் ஏரியை அளவீடு செய்து பாதுகாக்க வேண்டும்; நீர்வரத்து கால்வாயில் கட்டப்படும் கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், சில நாட்களுக்கு முன், தலைமை செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மாடம்பாக்கம் ஏரியை, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, ஏரி பாதுகாப்பு குழுவினர், தமது கோரிக்கைகளை அவரிடம் வலியுறுத்தினர். அதற்கு, மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.