முறையாக அனுமதி வாங்கியும் மண்டபம் கட்டாத டி.யு.சி.எஸ்., 

சென்னை, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் டி.யு.சி.எஸ்., எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், ரேஷன் கடை, மருந்தகம், காய்கறி கடை, பெட்ரோல் பங்க், காஸ் ஏஜன்சி ஆகியவற்றை நடத்தி வருகிறது. இந்த சங்கத்துக்கு, சென்னையின் முக்கிய இடங்களில், சொத்துக்கள் உள்ளன.

தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு வளாகத்தில், 2022ல் திருமண மண்டபம் துவக்கப்பட்டது. இது, குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. மக்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

மயிலாப்பூரில் சித்திரைக்குளம் அருகில், 4,250 சதுர அடியிலும்; மாதவபுரத்தில், 3,500 சதுர அடியிலும் மண்டபங்கள், 2024ல் கட்டப்பட்டன. இரு கட்டடங்களின் தரை தளத்தில் கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன.

மேலும், பெரம்பூர், அபிராமபுரம், திருமுல்லைவாயல், தாம்பரம் மேற்கு, கிழக்கு, அம்பத்துாரில் உள்ள இடங்களில் மண்டபங்கள் கட்டுவதற்கு டி.யு.சி.எஸ்., முடிவு செய்தது. இதற்கு, அரசு துறைகளிடம் அனுமதியும் பெற்றுள்ளது. இன்னும் கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை.

இதுகுறித்து, கூட்டுறவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெரம்பூரில் மண்டபம் கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில், பழைய கட்டடம் இடிக்க வேண்டும். இதற்கு அனுமதி பெற வேண்டும். இதேபோல், ஒவ்வொரு இடத்திலும் சில பணிகள் உள்ளன. தாம்பரம் கிழக்கில் காலியிடத்தில் காஸ் சிலிண்டர் கிடங்கு துவக்கப்பட்டுள்ளது; விரைவில் மண்டபம் கட்டும் பணி துவங்கப்படும்' என்றார்.

Advertisement