ஏமாற்றி சொத்து எழுதி வாங்கிய மகன் கமிஷனர் அலுவலகத்தில் தாய் புகார்
சென்னை,:ஈக்காட்டுதாங்கல், அருள்பிரகாசம் தெருவைச் சேர்ந்தவர் கமலா, 76. அவர் நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:
தன் கணவர் கட்டிய வீட்டின் தரைத்தளத்தில், மகன், மகள்கள் என, யாருடைய உதவியும் இன்றி, முதல் தள வீட்டு வாடகையை வைத்து தனியே வசித்து வந்தேன். என் மகன் பேகன், 'தனியே வசித்து வருவதால் உங்கள் உடல் நிலை மோசமாக உள்ளது. இனி உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். சகோதரிகளுக்கும் சொத்தில் பங்கு தருகிறேன்' என்று நம்பிக்கையூட்டினார்.
மேலும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. வங்கி கடன் பெற வேண்டுமென்றால், சகோதிரிகளுக்கு தெரியாமல் தான செட்டில்மெண்ட் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதன்படி, சொத்தை என் மகனுக்கு தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்தேன். அதன்பின், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், எனக்கு உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கொடுமை செய்தார்.
இதனால், என் மகள்கள் உதவியோடு, மகனுக்கு கொடுத்த தான செட்டில்மெண்டை ரத்து செய்துவிட்டேன். இதனால், மகனுக்கும், எனக்கும், 10 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை கிடையாது.
இந்நிலையில், கடந்தாண்டு பிப், 20ல், உடல் நிலைய சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இதை அறிந்து வந்த தன் மகன், 'முதுகெலும்பு பகுதியில் அறுவை சிகிச்சைக்கு அதிக பணம் தேவை. கடன் பெற முடியாது என்பதால், சொத்தை தன் பெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்து கொடு' என்று, வற்புறுத்தினார். மேலும், அம்மாவின் மருத்துவ செலவிற்காக கடன் பெற வேண்டுமென, என் மூத்த மகளிடம் சாட்சி கையெழுத்து போடு எனக்கூறி, கையெழுத்து வாங்கி, சொத்தை அவரது பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
சிகிச்சை முடிந்த பின், என் மகன், அவரது வீட்டிற்கே என்னை அழைத்துச் சென்றுவிட்டார். பின் மகள்களிடம் தொடர்பில் இருக்கக்கூடாது என்பதற்காக, என் மொபைல் போனையும் உடைத்துவிட்டார். என் இளைய மகள் மனோன்மணி, பிப்., 23ல், காவல் துறையினர் உதவியுடன் வந்து என்னை மீட்டார்.
உடல் நிலை சரியில்லாத நேரத்தில், என்னை மிரட்டி கையெழுத்து பெற்று மோசடியாக, தான செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்துள்ள மகன் பேகன் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.