திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு: நடிகை ரூபிணியிடம் மோசடி செய்த பி.ஆர்.ஓ.,

5


சென்னை: திருப்பதி ஏழுமலையான் முன், ஒரு மணி நேரம் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, ஒன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆந்திர, தமிழக முதல்வர்களுக்கு, நடிகை ரூபிணி புகார் அனுப்பி வைத்துள்ளார்.


மும்பையை சேர்ந்த நடிகை ரூபினி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றவர்களுடன் கதாநாயாகியாக நடித்துள்ளார். தற்போது, பரத நாட்டியம், குச்சுப்புடி நடனம் கற்றுத் தரும் பள்ளியை, மும்பையில் நடத்தி வருகிறார்.

திருப்பதி ஏழுமலையான் பக்தையான ரூபினி, அடிக்கடி அங்கு செல்வார். அப்போது, தமிழகத்தை சேர்ந்த சரவணன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். தேவஸ்தான அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன் எடுத்த போட்டோவை காட்டி, அவர்களுக்கு தேவையான சிறப்பு தரிசனம் செய்து கொடுத்து அனுப்பியதாகவும், அவர்களின் குடும்ப நண்பராக இருப்பதாகவும் கதை கட்டியுள்ளார்.

சரவணின் பேச்சை நம்பிய நடிகை, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார். ஒரு மணி நேரம் தரிசனம் செய்ய, 3 பேருக்கு 77,250 ரூபாய் தருமாறு, சரவணன் கூறியுள்ளார். அவர் கேட்ட பணத்தை, அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்ததும், தங்கும் விடுதி கட்டணமாக, 15 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு இதற்கு என, ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கி விட்டார்.

குறிப்பிட்ட தேதியில், அவர் கூறியபடி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யாமல், சில காரணங்களை சொல்லி தட்டிக்கழித்து வந்தார். அதன் பின்னர், நடிகையால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நடிகையை ஏமாற்றிய சரவணன், தற்போது, வேலுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பது தெரியவந்துள்ளது. இனிமேல் எந்த பக்தரையும் அவர் ஏமாற்றாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆந்திர, தமிழக முதல்வர்களுக்கு நடிகை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement