எங்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் தேவை; கல்லுாரி மாணவர்கள் 'பளிச்'

14


கோவை: புதிய கல்வி கொள்கை வலியுறுத்தும், 'மூன்றாவது மொழி வேண்டுமா வேண்டாமா' என்ற கேள்வி, பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடமே கேட்டு விட்டோம். அத்தனை பேரும் கேட்கிறார்கள், 'மூன்றாவதாக ஒரு மொழி கற்பதில் என்ன தவறு இருக்கிறது' என்று!

டி.பிரியதர்ஷிகா, தனியார் கல்லுாரி: இது அவரவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர்களுக்கு தேவை எனில், மூன்றாவது மொழியை கற்றுக்கொள்வர். அதில் எந்த தவறும் இல்லை.


Tamil News
Tamil News

எச்.சக்தி, தனியார் கல்லுாரி: ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப, மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ளலாம். அதை கட்டாயம் கற்க வேண்டும் என்பது தேவையில்லை. வேண்டும் என்றால் அவர்களே கற்றுக்கொள்வர்.


எ.அபிநயா, தனியார் கல்லுாரி: வெளிநாடு செல்வோருக்கு அந்நாட்டின் மொழி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதுபோன்ற சூழலில், -மூன்றாவது மொழி அவசியமாகிறது. ஆகவே மூன்றாவது ஒரு மொழியை கற்பது தவறில்லை.


வி.அக்சய், தனியார் கல்லுாரி: இன்று உலகளாவிய போட்டியை மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். அப்படி இருக்கையில், தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவதாக ஒரு மொழியை கற்பதில் தவறில்லை.


ஆர்.ரிஷி, தனியார் கல்லுாரி: எனது சொந்த ஊர் கேரளா. அங்கு நான் பள்ளியில் படிக்கும் மூன்றாவது மொழியாக தமிழை கற்றேன். தற்போது கோவையில் படிக்கிறேன். அங்கு நான் தமிழ் கற்றதால் தற்போது இங்கு என்னால் எளிதாக அனைத்து சூழ்நிலையையும் சமாளிக்க முடிகிறது. அதுபோல் ஒவ்வொருவருக்கும், மூன்றாவது மொழி மிகவும் இன்றியமையாத ஒன்று.


எஸ்.பிரியதர்ஷினி, அரசு கலைக்கல்லுாரி: மூன்றாவது மொழி கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். தமிழகத்தின் வெளியே எங்காவது செல்லும் போது, யாரையும் சார்ந்து இருக்க முடியாது. குறிப்பாக வெளியூர்களுக்கு பணிக்காக செல்லும் போது, மூன்றாவது மொழி அவசியம் தேவை.


எம்.வாணிஸ்ரீ, அரசு கலைக்கல்லுாரி: மூன்றாவது மொழி என்பது அவசியமே. இன்று, அனைவருக்கும் வெளிநாட்டு கனவு உள்ளது. வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும் போது, பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற மூன்றாவது மொழி தெரியாவிட்டால் வாய்ப்பு கைநழுவிப்போகும். இதைத்தவிர்க்க மூன்றாவது மொழி கற்பது முக்கியம்.


நா.உதயநிலா, அரசு கலைக்கல்லுாரி: மூன்றாவது மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது, அம்மொழி குறித்த அறிவு வளரும். அதன் வாயிலாக அந்த மொழி பேசும் இடத்துக்கு செல்லும் போது, பல விதங்களில் சாதிக்கலாம்.


எ.எம்.ஜெயபிரியா, அரசு கலைக் கல்லுாரி: அனைவரும் மூன்றாவது மொழி கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் மற்றவர்களுடன் போட்டியிட முடியும். பல பகுதிகளுக்கு செல்லும் போது நிலைமையை எளிதில் சமாளிக்க முடியும். எந்த ஒரு சூழலிலும் வெற்றி பெற முடியும்.

Advertisement