டாஸ்மாக் ஊழல்: அமைச்சரை கைது செய்ய பா.ஜ., வலியுறுத்தல்

2

மதுரை; ''டாஸ்மாக் ஊழல் தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டும்,'' என பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் கதளி நரசிங்கப்பெருமாள் மதுரையில் கூறினார்.

அவர் கூறியதாவது:

டில்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அளவிற்கு மதுபான ஊழல் நடந்துள்ளது. ரூ.1000 கோடி ஊழல் என்பது அமலாக்கத்துறை விரிவான விசாரணை நடத்தினால் ரூ.40 ஆயிரம் கோடிவரை நடந்திருக்க வாய்ப்புள்ளது. மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே வழக்குகள் பதிந்ததன் அடிப்படையில் மதுபான ஆலைகள், பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிறுவனங்களில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.

அதிக மது உற்பத்தி, பாட்டில்கள், மூடிகள், ஸ்டிக்கர்கள் தயாரிப்பு என கணக்கில் வராத முறையில் மதுபான ஆலைகள், பாட்டில் வினியோக நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளன. முறையற்ற வகையில் 40 சதவீத வியாபாரம் நடக்கிறது என டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றவில்லை.

டாஸ்மாக் ஊழலை கண்டித்து மார்ச் 17 ல் (நாளை) சென்னை எழும்பூரில் அதன் தலைமை அலுவலகத்தை பா.ஜ.,சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். தொடர் போராட்டமாக 5000 டாஸ்மாக் கடைகள் முற்றுகையிடப்படும். அமலாக்கத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்றார். நகர் மாவட்ட தலைவர் மாரிச்சக்கரவர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் பங்கேற்றனர்.

Advertisement