மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்

8


சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்பா நலமாக இருப்பதாக, அவரது மகன் அமீன் தெரிவித்துள்ளார்.




இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு வயது 58. இவர் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போதும் வெவ்வேறு மொழி படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். ஆஸ்கர் விருது, கிராமி விருது, அகாடமி விருது, கோல்டன் குளோபல் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.


இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று (மார்ச் 16) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக ரஹ்மானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக செய்திகள் பரவியது. ஆனால் இதனை அவரது குடும்ப உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். பயணம் தொடர்பால் அவர் பெரும் களைப்பாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.



அப்பா நலம்





ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எங்கள் அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விசாரித்த அனைவருக்கும், உங்கள் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.



என் தந்தைக்கு நீர்ச்சத்து சற்று குறைவாக இருந்தது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் வழக்கமான சோதனைகள் மேற்கொண்டோம். இப்போது அவர் நலமாக இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



உங்கள் அன்பும், ஆசீர்வாதமும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்கள் ஆதரவையும், அக்கறையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம். உங்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும், நன்றியும்! என தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முதல்வர் ஸ்டாலின் அறிக்கை




இது குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், டாக்டர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement