அதிக குழந்தைகள் பெறும் பெண்களுக்கு வருமான வரி விலக்கு: ஹங்கேரி பிரதமர் அறிவிப்பு

8

புடாபெஸ்ட்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் விக்டர் ஆர்பன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் பேசியதாவது:

குறைந்து வரும் மக்கள்தொகை வளர்ச்சியை சமாளிக்க, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, ஒரு குழந்தை உள்ள பெண்களுக்கு 30 வயது வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
ஹங்கேரியில் ஏற்கனவே,நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி விலக்கு உள்ளது. அதன் விரிவாக்கமாகவே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


மூன்று குழந்தைகளைப் பெற்ற பெண்களுக்கு வரி விலக்குகள் 2025 அக்டோபரிலும், இரண்டு குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு 2026 ஜனவரியிலும் அமலுக்கு வரும்.
இவ்வாறு விக்டர் ஆர்பன் பேசினார்.

Advertisement