ஆசிரியர்களை பாராமுகமாக நடத்தும் தமிழக அரசு; போராட துாண்டுகிறதா என சங்கங்கள் கேள்வி

8


மதுரை: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என மலைபோல் நம்பியிருந்த நிலையில் ஆசிரியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆசிரியர்களை பாராமுகமாக நடத்தி போராட துாண்டுகிறதா அரசு என சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இரண்டு கண்கள் என முதல்வர் ஸ்டாலின் பல இடங்களில் பெருமையாக குறிப்பிடுகிறார். ஆனால் சமுதாயத்தை சீர்படுத்தும் கல்வித்துறைக்கான வாக்குறுதிகளை ஆளுங்கட்சி தொடர்ந்து புறக்கணிக்கிறது. குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம், சம வேலைக்கு சம ஊதியம் என்று இல்லாமல் 14 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களுக்கு நீடிக்கும் சம்பள முரண்பாடு, பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் என பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கங்கள் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.



அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஆசிரியர்கள் போராட்டங்களில் எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பங்கேற்று 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என போராட்ட களத்தில் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று கடைசி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்த நிலையிலும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 4 ஆண்டுகளாக காத்திருந்தும் ஆசிரியர்களுக்கு ஒரு பயனுமில்லை. இதனால் ஆசிரியர்களை மீண்டும் போராட்ட நிலைக்கு அரசே தள்ளியுள்ளதாக பல்வேறு சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

முதல்வர் முரண்பாடு





இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: இந்த பட்ஜெட்டில் தி.மு.க., அளித்த முக்கிய வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு களையப்படும், பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்த்து முழுமையாக ஏமாந்து போயுள்ளோம்.


7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அந்த ஏழு மாநிலங்களின் நிதிநிலையும் தமிழகத்தை ஒப்பிடுகையில் குறைவு தான். ஆனாலும் ஏன் அமல்படுத்த முடியவில்லை. ஆந்திராவின் உத்திரவாத ஓய்வூதிய திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை பரிசீலித்து புதிய திட்டம் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.


ஆனால் அதுதொடர்பான ஒரு வரிகூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலை, ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலை என முதல்வர் ஸ்டாலின் முரண்பட்டுள்ளார். இது ஆசிரியர்களை போராடத் துாண்டுகிறது. இனி நடக்கும் ஆசிரியர்களின் போராட்டக் களம் வலுவானதாக இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளையும் நிரப்ப அஞ்சமாட்டோம் என்றார்.

Advertisement