தெர்மாகோல், தெர்மாகோல் என்று என்னை ஓட்டுகிறீர்கள்; சட்டசபையில் செல்லூர் ராஜூ வருத்தம்!

13

சென்னை: அதிகாரிகள் சொல்லித்தான் செய்தோம், ஏன் என்னை தெர்மாகோல், தெர்மாகோல் என்று ஓட்டுகிறீர்கள் என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் ராஜூ பேசினார்.


@1brசட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் 2வது நாளாக இன்று (மார்ச் 18) நடைபெற்றது. பல்வேறு முக்கியமான மக்கள் நல பிரச்னைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்தனர்.


அந்த வகையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூ பேசும் போது, ஓராண்டில் ராமேஸ்வரத்தில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். ஆட்சி முடிய ஓராண்டு உள்ள நிலையில் எப்படி அமைப்பீர்கள். ஓசூரில் விமான நிலையம் அமைப்பதாக அறிவித்தீர்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஓசூரில் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதியை பெற்று விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்றார்.

அவர் தெர்மோகோல் பற்றி குறிப்பிட்டுப் பேசியதும், தி.மு.க., உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. ராஜூவும் சேர்ந்து சிரித்தார்.

டி.ஆர்.பி.ராஜாவின் பதிலைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, விமானநிலையம் விவரம் பற்றி கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரிகள் கூறியதைக் கேட்டு இப்போதைய அமைச்சர்களும் பல விஷயங்களை செய்கிறீர்கள். அதுபோலத்தான் அதிகாரிகள் சொன்னதை நானும் செய்தேன். தெர்மாகோல், தெர்மாகோல் என்று கிண்டலடிக்கிறீர்கள், சரி பரவாயில்லை என்று கூறினார்.

Advertisement