எதிர் திசையில் வாகன ஓட்டிகள் பயணம் சிங்கபெருமாள்கோவில் மேம்பாலத்தில் பீதி

மறைமலைநகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதியான சிங்கபெருமாள்கோவில், அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.

இங்கு, சிங்கபெருமாள்கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகரம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் சென்று வருகின்றன.

மேலும் திருக்கச்சூர், ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு இந்த சாலை வழியாக வந்து செல்கின்றனர்.

இந்த பகுதியில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார் மார்க்கத்தில் இருந்து தாம்பரம் மார்க்கத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், மேம்பாலத்தின் ஒரு பக்கம் பணிகள் நிறைவடைந்தது.

கடந்த மாதம், ஒரு பக்கம் வாகனங்கள் சென்று வர, இந்த மேம்பாலத்தை நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.

இந்நிலையில், மேம்பாலத்தின் எதிர் திசையில் டூ-வீலர்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

தாம்பரத்தில் இருந்து ஒரகடம் செல்ல வரும் வாகன ஓட்டிகள், மெல்ரோசாபுரம் சிக்னலில் இருந்து எதிர் திசையில் மேம்பாலத்தின் மீது செல்கின்றனர்.

அதேபோல ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், மேம்பாலத்தின் ரவுன்டானா பகுதியிலேயே திரும்பி, எதிர் திசையில் வேண்டுமென்றே ஆபத்தை விளைவிக்கும் வகையில் செல்கின்றனர்.

நெடுஞ்சாலை துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டாலும், அதை எடுத்து விட்டு செல்கின்றனர்.

இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடுவோரால், சரியான திசையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, எதிர் திசையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மேம்பாலத்தின் ரவுன்டானா பகுதியில் சிமென்ட் தடுப்பு கற்கள் அமைத்து, மேம்பால பணிகள் முடியும் வரை அந்த வழியை அடைக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement