வறண்ட ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்பு! கிராம ஊராட்சிகளில் வறட்சி போக்க நடவடிக்கை

திருப்பூர்: கிராம ஊராட்சிகளில் கோடை வறட்சியை சமாளிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், வறண்ட மற்றும் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீர் தேவையில் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே, நகர, ஊரக பகுதிகளில் தடையில்லா நீர் வினியோகத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என, அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதில், கிராம ஊராட்சிகளில், போர்வெல் வாயிலாகவே பெருமளவு நீர், மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

பெரும்பாலான ஊராட்சிகளில், போர்வெல்கள் வறண்டு பயனற்று உள்ளன. அத்தகைய 'போர்வெல்'களை அடையாளம் கண்டு, கணக்கெடுக்க வேண்டும் என, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் வாயிலாக, கிராம ஊராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெயரளவில் கூடாது...



ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:

பெரும்பாலான ஊராட்சிகளில் வறண்ட, பயனற்ற ஆழ்துளை கிணறுகள் அதிகளவில் உள்ளன. அத்தகைய கிணறுகளை அடையாளம் காண்பதன் வாயிலாக, அதையொட்டி, உறிஞ்சுக்குழி அமைத்து, அதன் அருகேயுள்ள வீடுகள், கட்டடங்களில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீரை, உறிஞ்சுக் குழியில் செலுத்துவதன் வாயிலாக, நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

அதே போன்று, தண்ணீர் இல்லாத திறந்தவெளி கிணறு குறித்த விவரத்தையும் சேகரிக்கவும், ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து வெளியேறும் உபரிநீரையும், உறிஞ்சுக்குழி வாயிலாக நிலத்தடிக்குள் செலுத்தும் வகையிலான கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

கடந்தாண்டும் கூட, பயனற்ற மற்றும் வறண்ட ஆழ்துளை கிணறுகளில் நீர் செறிவூட்டல் பணிக்காக, நுாறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டது.

ஆனால், அவை பெயரளவில் மட்டுமே அமைக்கப்பட்டன. இம்முறை அதுபோல் இல்லாமல், சரியான முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement