நடிகர் விஷால் தங்கை கணவர் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு

சென்னை: வங்கிக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்த, நடிகர் விஷால் தங்கையின் கணவர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


சென்னை அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்தவர் சத்தியநாதன். எஸ்.பி.ஐ., வங்கி முதன்மை மேலாளரான இவர், 2023ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


அதில், 'எங்கள் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று, கோரியிருந்தார்.


மனுவை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர்.


அப்போது, மதுரவாயல் வங்கி கிளை வாடிக்கையாளர்களான தொழில் அதிபர்கள் வாகீசன் மற்றும் தெய்வானை ஆகியோர், கிழக்கு கடற்கரை சாலையில் திருப்போரூரில், நிலம் மற்றும் குடியிருப்பு வில்லா வாங்க கடன் கேட்டு, 2020ல், விண்ணப்பித்து இருந்தனர்.


கட்டுமானப்பணிகளை சந்தோஷ் என்பவர் மேற்கொள்ள முடிவானது. வங்கி மதிப்பீட்டாளர்கள் விஜயகுமார் மற்றும் செந்தில் ஆகியோர், நிலம் மற்றும் வில்லா ஆகியவற்றின் சொத்து மதிப்பை ஆய்வு செய்தனர். அதன்படி, 4.26 கோடி ரூபாய் கடன் தரப்பட்டது.

இந்த தொகையில், வாகீசன் மற்றும் தெய்வானை ஆகியோர் தெரிவித்தபடி, நிலத்தின் உரிமையாளரான உம்மிடி கிரிதிஷ் என்பவரின் வங்கிக் கணக்கிற்கு, 2.50 கோடி ரூபாயும், கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் சந்தோஷ் வங்கிக் கணக்கிற்கு, 1.76 கோடி ரூபாயும், அவர் நடத்தி வந்த நிறுவனத்தின் கணக்கில், 55.50 லட்சம் ரூபாயும் வங்கியில் இருந்து செலுத்தப்பட்டு உள்ளது.


வாங்கிய கடனுக்கு, 2021 ஏப்ரல் வரை, வாகீசன் மற்றும் தெய்வானை ஆகியோர் மாத தவணை செலுத்தி உள்ளனர். அதன்பின், கொரோனா கால கட்டம் என்பதால், கடன் தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.


வங்கியும், 2023 ஜூலை வரை கடன் தொகையை செலுத்த அனுமதி அளித்துள்ளது. திடீரென கட்டுமானப் பணிகள் குறித்து, வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கட்டுமானப் பணிகள், 2016ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.


மேலும், வங்கியில் மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த விஜயகுமார், செந்தில் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, வாகீசன், தெய்வானை ஆகியோர் போலி ஆவணங்கள் வாயிலாக வங்கிக்கடன் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.


இதற்கு நிலத்தின் உரிமையாளரான உம்மிடி கிரிதிஷும், சந்தோஷ் ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள், வாகீசன், கிரிதிஷ் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.


நகைக்கடை அதிபரான உம்மிடி கிரிதிஷ், நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவின் கணவராவார்.

Advertisement