எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரித்தாலே போதும்; பி.ஆர்.எஸ்., கட்சி

ஐதராபாத்: '' எம்.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதில் மாநிலங்களில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்,'' என பி.ஆர்.எஸ்., கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை குறித்து சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது ராமாராவ் கூறியதாவது: சென்னையில் நடந்த கூட்டத்தில் மூன்று விஷயங்களை முன்மொழிந்தோம். தொகுதி மறுவரையறை ஏன் செய்யப்படுகிறது? இந்தியா மக்கள் பிரதிநிதிகளால் பிரதிநிதித்துவபடுத்தப்பட்ட ஜனநாயக நாடு. மக்கள் தொகை அதிகரிப்பதால், அவர்களின் குரல் ஒலிக்க வேண்டும். எனவே உறுப்பினர்களன் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
மக்களுக்கு பிரச்னை என்றால் முதலில் எம்.எல்.ஏ.,வை தான் அழைப்பார். கவுன்சிலரையோ அல்லது பஞ்சாயத்து தலைவரையோ அழைக்க மாட்டார்கள். தங்கள் தொகுதி எம்.எல்.ஏ., தான் அவர்களின் முதல் தேர்வாக இருக்கும்.
எனவே மத்திய அரசு, குறிப்பிட்ட மாநிலங்களில் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களில் பிரதிநிதித்துவம், சிறந்த நிர்வாகம் உள்ளிட்ட சவால்களை சமாளிக்க முடியும்.
ஒரு மாநிலத்தில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை மாற்றம் செய்தால் கூட்டாட்சி தத்துவத்தில் பாதிப்பு ஏற்படாது. மாறாக எம்.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது, கூட்டாட்சி தத்துவத்திற்கு இடையூறு ஏற்படுத்தும்.
எம்.எல்.ஏ.,க்கள், மாநிலம் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பார்கள். எம்.பி.,க்கள் தேசிய நலன் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பார்கள். எம்.பி.,க்களின் எண்ணிக்கையை மாற்றாமல், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம்.
பார்லிமென்ட் எம்.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்தால், தேசிய அளவிலான வளர்ச்சி விகிதத்தை கணக்கில் எடுக்க வேண்டும் அல்லது இப்போதிருக்கும் தொகுதி எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையிலேயே அதிகரிக்க வேண்டும்.
மத்திய அரசு, 42வது சட்ட திருத்தம் மூலம் 1976 ல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை நிறுத்திவைத்தது. 2001ல் வாஜ்பாய் அரசு 84 வது சட்டதிருத்தம் மூலம் மேலும் 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தது. 50 ஆண்டுகளில் சீட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
தொகுதி மறுவரையறையானது, பொருளாதாரம், கல்வி மற்றும் வளர்ச்சி ரீதியில் வளர்ந்த மாநிலங்களை பாதிக்கக்கூடாது. தொகுதி மறுவரையறைக்கு மக்கள் தொகையை மட்டும் முக்கிய காரணியாக எடுப்பது ஏன்? நிதி பங்களிப்பு, வளர்ச்சி அல்லது மேம்பாட்டை எடுக்கலாம்.
நாட்டின் தேசிய தலைமை, பழைய காயங்களை ஆற்றுவதாக தான் அமைய வேண்டுமே தவிர புதிய காயத்தை ஏற்படுத்தக் கூடாது. 2047ல் இந்தியா உண்மையிலேயே வல்லரசாக இருப்பதற்கு கூட்டுறவு கூட்டாட்சி முக்கியமே தவிர, கட்டாய கூட்டாட்சி முறை அல்ல. இவ்வாறு ராமாராவ் கூறினார்.





மேலும்
-
கணவருடன் விவாகரத்து: 11 வயது மகனை கழுத்தறுத்து கொலை செய்த தாய்
-
இன்றைக்கு உயிரோடு இருக்கிறோம்... நாளை அது தெரியாது: தமிழக அரசை விளாசிய இ.பி.எஸ்.
-
அண்ணாமலைக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் உள்ளது: சொல்கிறார் பவன் கல்யாண்
-
நீதிபதி வீட்டில் சாக்கு மூட்டையில் பணம்; சுப்ரீம் கோர்ட் செயலுக்கு வக்கீல் உஜ்வால் நிகம் பாராட்டு
-
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தான் தி.மு.க. அரசுக்கு முக்கியமா; ராமதாஸ் கேள்வி
-
21 பந்தில் அரைசதம் அடித்த ஹெட்; ஐதராபாத் அணி அதிரடி ஆட்டம்