அ.தி.மு.க., பற்றிய கூட்டல் கணக்கு ஏமாறாமல் இருக்க முதல்வர் வாழ்த்து

சென்னை" அ.தி.மு.க.,வை அபகரிக்க முயற்சி நடப்பதாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசியதை தொடர்ந்து, 'கூட்டல் கணக்கு' தொடர்பாக, சட்டசபையில் நேற்று, சுவாரஸ்ய விவாதம் நடந்தது.

சட்டசபையில் நடந்த விவாதம்:



அமைச்சர் தங்கம் தென்னரசு: கல்லுாரி மாணவர்களுக்கு, 'லேப்-டாப்' வழங்கும் அறிவிப்பு தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கமணி, சற்று கவனக்குறைவாக மனக்கணக்கு போட்டு விட்டார்.


தி.மு.க.,வில் இருந்த போதும், வெளியேறிய போதும், எம்.ஜி.ஆர்., மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள் நாங்கள்.

முதல்வர் ஸ்டாலின் மீது அன்பும், உரிமையும் கொண்டவராக எம்.ஜி.ஆர்., இருந்தார். அரசியல் களத்தில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நீண்ட காலமாக களமாடி வருகின்றன.


சட்டசபையில் உட்கார்ந்து கொண்டு தங்கமணி கூட்டல், கழித்தல் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்.


ஆனால், அ.தி.மு.க., பற்றிய கூட்டல், கழித்தல் கணக்குகளை, வேறொரு இடத்தில் உட்கார்ந்து, இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது.

அ.தி.மு.க., தொண்டர்களின் எதிர்காலத்தை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்கு, சாணக்கிய தந்திரத்தோடு சிலர், எங்கோ உட்கார்ந்து கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மடிக்கணினி விவகாரத்தில், நீங்கள் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டதைப் போல, உங்கள் மடியில் இருக்கும் கனத்தை பறித்துக் கொள்ள நினைப்பவர்களிடம், அ.தி.மு.க.,வினர் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

நான் பேசியதை கேட்டு, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி மிகுந்த மகிழ்ச்சியோடு சிரிக்கிறார். அப்படியெனில், பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பது தெரிகிறது.

அ.தி.மு.க., - தங்கமணி: அ.தி.மு.க.,வுக்கு என்று கொள்கை இருக்கிறது. கிராமத்தில் இருந்து வந்த தலைவர் பழனிசாமி வலிமையோடு கட்சியை நடத்தி வருகிறார். எனவே, எந்த கூட்டல் கணக்கிலும் நாங்கள் ஏமாற மாட்டோம்.


சபாநாயகர் அப்பாவு: எல்லாம் உங்கள் மீதான பாசம் தான்.

முதல்வர் ஸ்டாலின்: கூட்டல் கணக்கில் ஏமாற மாட்டோம் என, தங்கமணி சொல்லியிருக்கிறார். ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement