கொடிக்கம்பம் அகற்றும் விவகாரம் தி.மு.க.,வால் நெருக்கடி: மார்க்., கம்யூ

1



மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் அகில இந்திய மாநாடு குறித்த கருத்தரங்கம் தேனியில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு, அக்கட்சியின் மாநில செயலர் சண்முகம் பேசியதாவது:



நெடுஞ்சாலை ஓரங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், அக்கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளார்.


அதில், 'உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று, கட்சித் தொண்டர்கள் உடனடியாக நெடுஞ்சாலை ஓரம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் நடப்பட்டுள்ள தி.மு.க., கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும். அந்த தகவலை, கட்சித் தலைமைக்கு உரிய வகையில் தெரிவிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


அவரின் இந்த அறிவிப்பு, எங்களை போன்றோருக்கு பெரும் இக்கட்டை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க., கொடிக் கம்பங்களை அகற்றுமானால், அதைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் கட்டாயம் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.


அரசியல் கட்சிகளுக்கு கொடிக் கம்பங்கள் பிரதானமானவை. சட்டத்தால் அனுமதிக்கப்பட்டவை. அப்படி இருக்கையில், கொடிக் கம்பங்கள் கூடாது என எப்படி நீதிபதிகள் தெரிவிக்கின்றனர் என புரியவில்லை.

தீர்ப்பு வந்ததும், அனைத்து கட்சிகளையும் கூட்டி வைத்து, இதற்கு என்ன செய்யலாம் என தி.மு.க., தரப்பில் கேட்டிருக்கலாம்.


மாற்று வழி குறித்து யோசித்திருக்கலாம். எதையுமே செய்யாமல், தன்னிச்சையாக முடிவெடுத்து கட்சியினருக்கு அறிவிப்பு வெளியிட்டிருப்பது சரியல்ல.


அது மட்டுமல்ல, 12 வாரங்களில் கட்சிக் கொடிகள் அகற்றப்படாவிட்டால், கட்சிக் கொடிக் கம்பங்களை காவல் துறையினர் அகற்றிவிட்டு, அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம் எனவும் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. அரசியல் கட்சியினர் மீது, நீதிபதிகளுக்கு அப்படி என்ன தான் கோபம் என புரியவில்லை.


எங்களுக்கு 10 கொடிக் கம்பங்கள் இருக்கிறது என்றால், தி.மு.க.,வுக்கு 150 கொடிக் கம்பங்கள் இருக்கும். பாதிப்பு தி.மு.க.,வுக்குத் தான் அதிகமாக இருக்கும். அதனால், இந்த விஷயத்தில் தி.மு.க., தான் நிறைய யோசித்திருக்க வேண்டும்.


நீதிபதிகள் உத்தரவை அப்படியே ஏற்றுக் கொண்டு, தி.மு.க.,வினருக்கு அக்கட்சி பொதுச்செயலர் உத்தரவிட்டிருக்க வேண்டியதில்லை; மேல்முறையீடு செய்திருக்கலாம்.

அப்படி செய்திருந்தால், எல்லா கட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுஇருக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.




- நமது நிருபர் -

Advertisement