டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணம்: விசாரிக்க 3 பேர் குழு அமைப்பு

18

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் எடுக்கப்பட்டதாக வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். மேலும், அவருக்கு நீதித்துறை சார்ந்த எந்த பணிகளையும் ஒதுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


டில்லி ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா, 56. இவர், டில்லி துக்ளக் சாலையில், நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார்.இவரது வீட்டில், கடந்த 14ம் தேதி இரவு 11:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை.அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்களும், டில்லி போலீசும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.அப்போது அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில், கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணக்குவியல்களை போலீசார் கண்டெடுத்ததாக தகவல் வெளியானது.



அதில், கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் இருந்ததாகவும், சில கோடி ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு அதை அனுப்பி வைத்தது. இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.மேலும், அவர் ஏற்கனவே பணியில் இருந்த அலகாபாத் ஐகோர்ட்டிற்கே அவரை பணியிட மாற்றம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.ஆனால், 'அப்படி எதுவும் பணம் கைப்பற்றப்படவில்லை' என, டில்லி தீயணைப்பு படை தலைவர் நேற்று இரவு திடீரென மறுப்பு தெரிவித்தார்.



இந்நிலையில் யஷ்வந்த் வர்மா குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்து உள்ளார். இக்குழுவில், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜிஎஸ் சாந்தவாலியா, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


மேலும், யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த நீதித்துறை பணிகளையும் ஒதுக்க வேண்டாம் என டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளார். யஷ்வந்த் வர்மா விவகாரம் குறித்து டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி தாக்கல் செய்த அறிக்கை மற்றும் ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

Advertisement