பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றம் கண்காணிக்க புதிய கருவி வடிவமைப்பு

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் நடந்த கருத்தரங்கில் பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றம் குறித்து கண்காணிப்பதற்கான புதிய கருவியை வடிவமைத்து சோதனை நடத்தினர்.

மதுரை காமராஜ் பல்கலை கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை சார்பில் புதுமடம் காமராஜ் பல்கலை கடலியல் ஆராய்ச்சி மையத்தில் பவளப்பாறை கண்காணிப்பு தொடர்பான திறன் மேம்பாடு மற்றும் கால நிலை கண்காணித்தல் குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

மண்டபம் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானி வினோத் துவக்கி வைத்தார். அழகப்பா பல்கலை கடலியல் துறை பேராசிரியர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் கடல் நீர் ஆராய்ச்சிக்கான கருவிகளை எவ்வாறு இணைப்பது மற்றும் தன்னிச்சை பவளப்பாறை கண்காணிப்பு கட்டமைப்புகளில் குடியேறும் கடல் வாழ் உயிரினங்களை எவ்வாறு ஆய்வு செய்வது, கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பில் கால நிலை நடவடிக்கைகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.

கடல் சூழலில் பல்லுயிர் பெருக்கத்தை கண்காணிக்க பயன்படும் ஒரு புதுமையான கருவி உருவாக்கப்பட்டு கடலில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த புதிய கருவியானது ஒன்பது இரும்பு பிளேட்டுகள் வரிசையாக மேலிருந்து கீழாக சிறு இடை வெளியுடன் போல்ட்டுகளால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இது முதல் கட்டமாக ஜன.,29 ல் புதுமடம் கடலில் குறைந்த ஆழத்தில் 2 சதுர அடி பரப்பில் வைக்கப்பட்டது. இக்கருவியை ஆராய்ச்சியாளர்கள் தினமும் கண்காணித்து வந்தனர். 60 நாட்களுக்குப்பின் இக்கருவியை எடுத்து இரும்பு பிளேட்டுகளை பிரித்து பார்த்த போது அப்பகுதியில் எந்த மாதிரியான கடல் வாழ் உயிரினங்கள் இருக்கிறது என்பதை அறிய முடிந்தது.

இதில் கடல்பாசி, நண்டு, சிறிய வகை மீன்கள், போன்றவை முட்டையிட்டு தங்கள் வாழ்விடமாக மாற்றியிருந்தது. இதன் அடிப்படையில் எந்த வகையான உயிரினங்கள் வாழ்கிறது என்பதை அறிய முடிகிறது. இது கடல் சார் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கடலுக்கு அடியில் சென்று தினமும் பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வாழ் உயிரினங்கள் குறித்த தரவுகளை சேகரிப்பதற்கு பதிலாக இந்த கருவியின் மூலம் பல்லுயிர் பெருக்கம் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பேராசிரியர் மலைராஜ் சந்தான கிருஷ்ணன் கூறுகையில்,

இந்த கருவி மூலம் குறுகிய பரப்பளவில் என்னென்ன மீன்கள் கிடைக்கும் என அறிந்து அதற்கு ஏற்ப மாற்று மீன் தொழில் செய்து மீனவர்களின் வருவாயை பெருக்க பயனுள்ளதாக இருக்கும், என்றார்.

கடலியல் துறை பேராசிரியர் ஆனந்த் கூறுகையில், இக்கருவியை கொண்டு மாறிவரும் கால நிலைக்கு ஏற்ப கடல், தரை வாழ் உயிரினங்கள் எவ்வாறு மாறுகிறது என வெவ்வேறு அளவு மற்றும் நேரத்தில் தரவுகளை சேகரிக்க முடியும் என்றார்.

Advertisement