விடுதிகளில் பயோமெட்ரிக்  செயல்படுத்துவதில்  சுணக்கம்; பிற திட்டங்களும் தாமதம்

விருதுநகர் : தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட நல விடுதிகளில் பயோ மெட்ரிக் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது முழுமைப்படுத்துவதில் தாமதிப்பதால் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் எண்ணிக்கையின் உறுதி தன்மை வேண்டி பிற திட்டங்களையும் செயல்படுத்த அரசு தாமதித்து வருகிறது.

தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிட நல விடுதிகள் செயல்படுகின்றன. பொதுவாக பிறப்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிட நல விடுதிகளில் பெரும் பிரச்னையாக இருப்பது மாணவர்களின் எண்ணிக்கை தான். இலவச பஸ் பாஸ், சைக்கிள் போன்ற அரசு திட்டங்களாலும், மாணவர்கள் விடுதியில் தங்குவது குறைந்து வருகிறது. வார்டன்கள் இழுத்து பிடித்து நடத்தினாலும், சிலர் பொய் கணக்கு காட்டி நிதியை ஏய்ப்பதாக புகார் உள்ளது. இதனால் விடுதிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 70 சதவீத விடுதிகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் இதை காரணம் காட்டி அரசு சார்பில் விடுதிக்கு அனுப்பப்படும் திட்டங்களுக்கான நிதிகள், பொருட்கள் வழங்கப்படவில்லை. மாணவர்களின் எண்ணிக்கை உறுதியாக தெரிய வேண்டும் என்ற முனைப்பில் துவங்கிய பயோமெட்ரிக் பணி தற்போது சுணக்கத்தில் உள்ளதையே காரணம் காட்டி புதிதாக சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாயுடன் கூடிய மெத்தை, போர்வை கொண்ட வரவேற்பு தொகுப்பு, முடிவெட்டும் கூலி, சோப்பு, எண்ணெய் ஆகியவற்றிற்கான உதவித்தொகையும் அரசு தாமதம் செய்து வருகிறது. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி வார்டன்களும் தவிக்கின்றனர்.

Advertisement