கணவருடன் விவாகரத்து: 11 வயது மகனை கழுத்தறுத்து கொலை செய்த தாய்

நியூயார்க்: கணவரிடம் விவாக ரத்து பெற்ற தாய், தனது 11 வயது மகனை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சரிதா ராமராஜு (48). இவரது கணவர் ராமராஜு. தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகன் இருந்தார். கடந்த 2018ம் ஆண்டு கணவர் ராமராஜுவை விவாகரத்து செய்துவிட்டு சரிதா தனது மகனுடன் கலிபோர்னியா மாகாணத்தில் தனியாக குடியேறினார்.

இந்நிலையில் 11 வயது மகனை தனது கட்டுப்பாட்டில் வைத்து வளர்க்கவும், கல்வி மருத்துவம் ஆகியவற்றை பார்த்துக்கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு சரிதாவின் முன்னாள் கணவர் ராமராஜு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட், சரிதாவின் முன்னாள் கணவர் ராமராஜுவின் கட்டுப்பாட்டில் மகன் இருக்க அனுமதி அளித்தது. சரிதாவுக்கு அடிக்கடி மகனை வந்து பார்த்துச் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் சரிதா தனது மகன் விருப்பப்படி அவரை அழைத்துக் கொண்டு, 'டிஸ்ட்னிலேன்ட்' பூங்காவுக்கு 3 நாள் சுற்றுலா சென்று, அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

அங்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு, அறையில் 11 வயது மகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் போதைப்பொருள் உட்கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கொலை செய்வதற்கு முன்பு, போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரிதாவை வீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் உடல்நிலை தேறிய நிலையில் சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆரஞ்சு கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் டாட் ஸ்பிட்சர் கூறியதாவது:

ஒரு குழந்தைக்கு பாதுகாப்பே அவர்களது பெற்றோர் தான். அன்பால் பராமரிப்பதற்கு பதிலாக, மகனை தாயே கழுத்தறுத்து கொலை செய்து விட்டார். சரிதா மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.

Advertisement