நீதிபதி வீட்டில் சாக்கு மூட்டையில் பணம்; சுப்ரீம் கோர்ட் செயலுக்கு வக்கீல் உஜ்வால் நிகம் பாராட்டு

26

புதுடில்லி: டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் வீடியோவை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டது பாராட்டுக்குரிய விஷயம் என மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் தெரிவித்தார்.


டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.


இது குறித்து மூத்த வழக்கறிஞரும், பா.ஜ., தலைவருமான உஜ்வால் நிகம் கூறியதாவது:
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணையை துவங்கி உள்ளது. வெளிப்படைத்தன்மை என்பது நீதித்துறையில் முக்கியம். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் செயலை நான் பாராட்ட விரும்புகிறேன்.


எந்தவொரு நாட்டின் ஸ்திரத்தன்மையும் இரண்டு விஷயங்களை சார்ந்துள்ளது என்று நான் எப்போதும் கூறுவேன். மக்கள் அந்நாட்டின் கரன்சி (பணம்) மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக, மக்கள் அந்த நாட்டின் நீதித்துறை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அதிக அளவு பணம் தொடர்பாக வீடியோவை உச்ச நீதிமன்றம் இணையத்தில் வெளியிட்டது. இது விசாரணைக்குரிய விஷயம் போல் தெரிகிறது. உச்ச நீதிமன்றம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். வெறும் இடமாற்றம், பணிநீக்கம் மட்டும் போதாது. இதுபோன்ற விஷயங்களில் முக்கிய முடிவுகளை பார்லிமென்ட் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

யார் இந்த உஜ்வால் நிகம்

* உஜ்வால் நிகம் பிரபலமான வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

* இவர் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடைபெற்ற மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டவர்

* பூனம் மகாஜனின் தந்தை பிரமோத் மகாஜனின் கொலை வழக்கிலும் உஜ்வல் நிகம் வழக்கறிஞராக செயல்பட்டார்.

* குல்ஷன் குமார் கொலை வழக்கு, 1993 மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குககளில் வழக்கறிஞராக இருந்துள்ளார் உஜ்வல் நிகம்.

* 2013 மும்பை கூட்டு பலாத்கார வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் இருந்தார்.
கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., கட்சி சார்பில் மும்பையில் போட்டியிட்ட நிகம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement