பெங்களூரு அணி முதல் வெற்றி: கோலி அரைசதம் விளாசல்

கோல்கட்டா: பிரிமியர் போட்டியில் 30 பந்தில் மின்னல் வேக அரைசதம் விளாசிய கோலி ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார். இவரது விளாசல் கைகொடுக்க, பெங்களூரு அணி இத்தொடரின் முதல் வெற்றியை பெற்றது.

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
ரஹானே விளாசல்: கோல்கட்டா அணிக்கு குயின்டன் டி காக் (4) ஏமாற்றினார். ராசிக் சலாம் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த கேப்டன் ரஹானே, சுயாஷ் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்த போது ராசிக் பந்தில் நரைன் (44) அவுட்டானார். குர்ணால் பாண்ட்யா 'சுழலில்' ரஹானே (56), வெங்கடேஷ் (6), ரிங்கு சிங் (12) சிக்கினர். ஆன்ட்ரி ரசல் (4) சோபிக்கவில்லை. அங்கிரிஷ் ரகுவன்ஷி (30) ஓரளவு கைகொடுத்தார்.


கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்தது. ராமன்தீப் சிங் (6), ஸ்பென்சர் ஜான்சன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

நல்ல துவக்கம்: பெங்களூரு அணிக்கு பில் சால்ட், விராத் கோலி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி ஓவரில் தலா ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசிய சால்ட், 25 பந்தில் அரைசதம் எட்டினார். ஸ்பென்சர் ஜான்சன் பந்தில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்டார் கோலி. முதல் விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது வருண் 'சுழலில்' சால்ட் (56) சிக்கினார். தேவ்தத் படிக்கல் (10) நிலைக்கவில்லை. ஹர்ஷித் ராணா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, 30 பந்தில் அரைசதம் கடந்தார்.

ஹர்ஷித் வீசிய 15வது ஓவரில் 4 பவுண்டரி விளாசிய கேப்டன் ரஜத் படிதர் (34) நம்பிக்கை தந்தார். ஸ்பென்சர் ஜான்சன் பந்தில் வரிசையாக ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த லிவிங்ஸ்டன் வெற்றியை உறுதி செய்தார்.

பெங்களூரு அணி 16.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி (59), லிவிங்ஸ்டன் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.




400வது போட்டி


பெங்களூரு அணியின் விராத் கோலி, தனது 400வது 'டி-20' போட்டியில் (பெங்களூரு-268, இந்தியா-127, டில்லி-5 போட்டி) பங்கேற்றார்.



மணி கவுரவம்
கோல்கட்டாவில் நேற்று பிரிமியர் 18வது சீசனுக்கான முதல் போட்டி நடந்தது. ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷா, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி, ஈடன் கார்டன் மைதானத்தில் இருந்த மணி அடித்து போட்டியை துவக்கி வைத்தனர்.

முதன்முதலாய்...
பிரிமியர் 18வது சீசனுக்கான முதல் போட்டி கோல்கட்டாவில் நடந்தது. இதில் கோல்கட்டா, பெங்களூரு மோதின.
* பெங்களூரு கேப்டன் ரஜத் படிதர், முதல் 'டாஸ்' வென்றார்.
* முதல் பந்தை ஹேசல்வுட் (பெங்களூரு) வீச, குயின்டன் டி காக் (கோல்கட்டா) எதிர்கொண்டார்.
* முதல் பவுண்டரி குயின்டன் டி காக் அடித்தார்.
* முதல் விக்கெட் (குயின்டன்) ஹேசல்வுட் கைப்பற்றினார்.
* முதல் சிக்சர் ரஹானே பறக்கவிட்டார்.
* முதல் அரைசதம் ரஹானே விளாசினார்.
* பெங்களூரு அணி முதல் வெற்றி பெற்றது.

Advertisement