அமெரிக்கா வெளியேற்றிய துாதருக்கு தென் ஆப்ரிக்காவில் உற்சாக வரவேற்பு!

1


கேப் டவுன்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டால் வெளியேற்றப்பட்ட தென் ஆப்ரிக்க தூதர் இப்ராஹிம் ரசூல், தனக்கு எந்த கவலையும் இல்லை எனக்கூறியுள்ளார்.


தென் ஆப்ரிக்காவில் வசிக்கும் வெள்ளை இன மக்கள் வைத்துள்ள நிலங்கள் தொடர்பாக அந்நாடு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதனால் அந்நாட்டிற்கு நிதியுதவி வழங்குவதை அமெரிக்க நிறுத்தி சில குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அதற்கு தென் ஆப்ரிக்கா மறுத்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இச்சூழ்நிலையில், அமெரிக்காவில் அதிபராக பதவியேற்ற உடன் டொனால்ட் டிரம்ப் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டிற்கான தென் ஆப்ரிக்கா தூதர் இப்ராஹிம் ரசூல் அதிருப்தியில் இருந்தார்.


சமீபத்தில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த இணையதளம் வாயிலான கருத்தரங்கில் இப்ராஹிம் ரசூல் பேசுகையில், அமெரிக்காவில் நாம் வாழும் முறையையும், நாம் நிலைநிறுத்தப்படும் விதத்தையும் நாம் மாற்ற வேண்டும். பழைய முறையில் நாம் செயல்படுவது சிறந்ததாக இருக்காது. அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர் சிறுபான்மையினராக மாறக்கூடிய சூழ்நிலையில் அபாயம் உள்ளதால், டிரம்ப் ஒரு மேலாதிக்கத்தை அணி திரட்டுகிறார் என தெரிவித்தார்.


இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ' அமெரிக்காவை வெறுக்கும் இனவெறி அரசியல்வாதி' எனக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து இப்ராஹிம் ரசூல் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இதுபோன்று அமெரிக்கா அரிதாகவே நடவடிக்கை எடுக்கும், கீழ் நிலை அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட போதிலும், உயர் அதிகாரிகள் வெளியேற்றம் என்பது அசாதாரணமானது.

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இப்ராஹிம் ரசூல் இன்று( மார்ச் 23) கேப் டவுன் நகர் வந்தடைந்தார். விமான நிலையத்தில், ஆப்ரிக்கன் தேசிய காங்கிரஸ், தென் ஆப்ரிக்கா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கூடி வரவேற்றனர். 'அப்போது தென் ஆப்ரிக்காவை இப்ராஹிம் ரசூல் பெருமைப்படுத்தினார்' என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை வைத்து இருந்தனர்.

கேப் டவுன் வந்திறங்கிய இப்ராஹிம் ரசூல் தனது கருத்தில் உறுதியாக உள்ளதாகவும், தனக்கு எந்த கவலையும் இல்லை என்றும் தெரிவித்தார்.


யார் இவர்


அமெரிக்காவில் பராக் ஒபாமா அதிபராக இருந்த போது 2010 முதல் 2015ம் ஆண்டு வரை அந்நாட்டிற்கான அமெரிக்க தூதராக இப்ராஹிம் ரசூல் பணியாற்றி உள்ளார்.
அமெரிக்காவில் அவருக்கு இருந்த அனுபவம் மற்றும் தொடர்புகள் காரணமாக, மீண்டும் அவரை கடந்த ஆண்டு ஜோ பைடன் ஆட்சி காலத்தில் தூதராக தென் ஆப்ரிக்கா அரசு நியமித்தது.

Advertisement