'உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்' ரயில்வே உபயோகிப்பாளர் குழு வலியுறுத்தல்

பொள்ளாச்சி : 'பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்,' என, பாலக்காடு கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கேரளா மாநிலம், பாலக்காட்டில் கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் பங்கேற்று, பொள்ளாச்சி தேவைகள் குறித்து பேசினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்துகின்றனர்.ஆன்மிகம், சுற்றுலாத்தலம் நிறைந்த பகுதியாக பொள்ளாச்சி உள்ளது.

இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொள்ளாச்சி பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணியர், பொதுமக்களுக்கு உதவும்.

கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சி வழியாக பாலக்காட்டுக்கு இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு ரயில்வே அதிகாரிகள், 'ரயில்வே போர்டுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி கிடைத்தால் இயக்கலாம்,' என்றனர். பொள்ளாச்சி எம்.பி., வாயிலாக வலியுறுத்தி இதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

எர்ணாகுளம் - பாலக்காடு மெமு ரயில், பொள்ளாச்சி வரை நீட்டிக்க வலியுறுத்தப்பட்டது. பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் புதுப்பிப்பு பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, போத்தனுார் வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement