ரயில்வே மேம்பாலம் அமைக்க முடியுமா? அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் அருகே, மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், இடம் குறித்து ரயில்வே அதிகாரிகள், எம்.எல்.ஏ., உடன் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி வடுகபாளையம் செல்வகுமார் விஸ்தரிப்பு வீதியில், 100 ஆண்டுகளாக ரயில்வே கேட் செயல்படுகிறது. வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள், இந்த ரயில்வே கேட்டை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், கோவையில் இருந்து வடுகபாளையம் செல்வோரும், சி.டி.சி., மேடு வழியாக ரயில்வே கேட்டை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. பள்ளி, கல்லுாரி மணவர்கள், துாய்மை பணியாளர்கள் இவ்வழியாகத்தான் சென்று வந்தனர்.
இந்த கேட் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடுவதாக தகவல் பரவியதையடுத்து கடந்தாண்டு, நவ., மாதம் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து, ரயில்வே துறை அதிகாரிகள், போலீசார், வருவாய்துறையினர் பேச்சு நடத்தினர். ரயில்வே கேட் பொதுமக்களுக்கு எவ்வளவு பயன் உள்ளது என்றும், ரயில்வே கேட்டுக்கு மாற்றாக சொல்லப்படும் மற்றொரு ரோடு பொதுமக்களுக்கு பாதுகாப்பற்றதாக உள்ளது என அதிகாரிகளிடம் விளக்கப்பட்டது.
இந்நிலையில், பொள்ளாச்சிக்கு வந்த பாலக்காடு கோட்ட ரயில்வே பொறியாளர் அன்சுல் பார்தீ, அதிகாரிகள் பஸ்வான், சிவின் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், பாலம் கட்டுவதற்கான இடங்களை காண்பித்தார்.
அப்பகுதி பொதுமக்கள், ரயில்வே அதிகாரிகளிடம் 'கேட் மூட வேண்டாம். மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தினர்.
ஆய்வின் போது, முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.
எம்.எல்.ஏ., கூறுகையில், ''ரயில்வே கேட்டுக்கு மாற்றாக பாலம் அமைக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதங்கள் வாயிலாக வலியுறுத்தப்பட்டது. இதற்கு ரயில்வே அதிகாரிகள் சம்மதம் தெரிவித்து சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான இடங்கள் காண்பிக்கப்பட்டது. அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேம்பாலம் அமைக்கும் வரை ரயில்வே கேட்டை மூட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது,'' என்றார்.