அமராவதி அணை துார்வாரும் திட்டம் தமிழக அரசு நிதி ஒதுக்குமா?

உடுமலை : அமராவதி அணை துார்வாரும் திட்டத்துக்கு, இந்தாண்டு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, இரு மாவட்ட விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, 1959ம் ஆண்டில், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அணை 4 டி.எம்.சி., கொள்ளளவு உடையதாகும்.
திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அணை வாயிலாக, பாசன வசதி பெறுகிறது; நுாற்றுக்கணக்கான குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக அமராவதி ஆறு உள்ளது. அணை, 90 அடி உயரம், 4,047 மில்லியன் கனஅடி நீர் இருப்பு கொண்டதாகும்; பயன்பாட்டுக்கு வந்தது முதல் துார்வாரப்படவில்லை. அணையின் மொத்த நீர்த்தேக்க பகுதியில், 15 முதல் 20 சதவீதம் வரை வண்டல் மண் தேங்கியுள்ளது.
இதனால், பருவமழை காலத்தில், அணை விரைவில் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. முழு கொள்ளளவு நீர்த்தேக்க முடியாததால், குறுகிய காலத்தில் நீர்மட்டம் சரிந்து, ஆயக்கட்டு நிலங்களில், நெல் சாகுபடிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.
பிரச்னைக்கு தீர்வாக, அணையை துார்வாரி, முழு கொள்ளளவில் நீர் தேக்க வேண்டும் என கரூர், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த, 2020ல் அமராவதி அணையை துார்வாரும் திட்டத்துக்கு பொதுப்பணித்துறை சார்பில் திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால், அந்தாண்டு அணை நீர்மட்டம் குறையாததால், துார்வாரும் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இவ்வாறு, பல ஆண்டுகளாக அணை துார்வாரும் திட்டம் இழுபறியாக உள்ளது.
கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழை சீசனில், 4 டி.எம்.சி.,க்கும் அதிகமான நீர் உபரியாக அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. அணையில் முழு கொள்ளளவில் நீர்த்தேக்க முடிந்திருந்தால், இந்த கோடை காலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.
எனவே, இந்தாண்டு நீர்மட்டம் குறைந்ததும், அணையை துார்வாரும் திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்க வேண்டும். தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்று, துார்வாரும் பணிகளை மேற்கொண்டு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஐ.பி.எம்.,
-
வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்?
-
கார் விபத்தில் காயங்களுடன் தப்பினார் நடிகர் சோனு சூட் மனைவி!
-
அண்ணனை கொல்ல முயன்ற தங்கை குடும்பத்துக்கு தண்டனை
-
ரயிலில் மது பாட்டில் கடத்தியவர் கைது: திண்டுக்கல் வழியாக அதிகரிக்கும் கடத்தல்
-
பெண் மேலாளர் மரண வழக்கு: ஆதித்யா தாக்கரே மீது புதிய புகார்