நகரில் பராமரிப்பில்லாத பூங்காக்கள்; நகராட்சி கண்டுகொள்ளாமல் அவலம்

உடுமலை: நகரிலுள்ள அனைத்து வார்டுகளிலும், ஒரு பூங்கா கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியும் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளதால், உடுமலை நகர மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கோடை விடுமுறைக்கு முன், புதர்களை அகற்றவாவது நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
உடுமலை நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில், 300க்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் உள்ளன. இந்த வீட்டு மனைகளில் முன்பு, 120க்கும் மேற்பட்ட பூங்கா, பொது ஒதுக்கீடு நிலம் மற்றும் திறவிடம் என விதிமுறைகளின்படி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
நகராட்சி நிர்வாகத்திடம் முறையாக பொது ஒதுக்கீடு இடம் ஒப்படைக்காதது மற்றும் ஒப்படைத்த நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களால், பொது ஒதுக்கீடு நிலங்கள் படிப்படியாக மாயமாக துவங்கியது. சில ஆண்டுகளுக்கு முன் பூங்கா இடங்களை மீட்கும் வகையில், 55 பூங்கா இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு நகராட்சி நிர்வாகம் சார்பில், தகவல் பலகை வைக்கப்பட்டது.
அதில், பூங்கா இடம் குறித்த விபரங்கள் எழுதப்பட்டு, சில இடங்களில் மட்டும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. சிறப்பு நிதி திட்டத்தில், சில பூங்காவில், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இவை அனைத்தும் குறுகிய காலம் மட்டுமே நடைமுறையில் இருந்தது. தற்போது நகரில் எந்த பூங்காவையும் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. புதர் மண்டி மக்கள் அப்பகுதிக்கு செல்லவே அச்சப்படும் சூழ்நிலை உள்ளது.
சில பூங்கா இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. கம்பி வேலியை சேதப்படுத்தி பூங்காவிலுள்ள விளையாட்டு உபகரணங்கள் திருடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இவ்வாறு, படிப்படியாக பல பூங்காக்கள் மாயமாகி வருகிறது.
நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், 5க்கும் மேற்பட்ட பூங்காக்கள் மேம்பாட்டு பணிகளும் பல ஆண்டுகளாகவே இழுபறியாக உள்ளது. பணிகளை குறித்த நேரத்தில் முடிக்காத ஒப்பந்ததாரர் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நகரின் பெரிய பூங்காவான அண்ணா பூங்காவையும், மேம்படுத்துவதாக பல ஆண்டுகளாக தெரிவிக்கின்றனர்; பல லட்சம் ரூபாய் அரசு நிதியை விழுங்கியும், பூங்கா பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதனால், நகர மக்கள் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்லவும், குழந்தைகள் விளையாடவும் பூங்கா இல்லாமல் தவித்து வருகின்றனர்.
நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னை, நகருக்குள் வலம் வரும் நகராட்சி அதிகாரிகள் கண்ணில் தென்படாததும், காதுகளை எட்டாததும், ஆச்சரியப்படுத்துகிறது.
நகராட்சிக்குட்பட்ட, 33 வார்டுகளிலும் உள்ள பூங்கா இடங்களை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களுடன் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வரும் கோடை விடுமுறை காலத்துக்கு முன், புதர்களை அகற்றி,சில பூங்காக்களை மட்டுமாவது மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர, நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
மேலும்
-
9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஐ.பி.எம்.,
-
வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்?
-
கார் விபத்தில் காயங்களுடன் தப்பினார் நடிகர் சோனு சூட் மனைவி!
-
அண்ணனை கொல்ல முயன்ற தங்கை குடும்பத்துக்கு தண்டனை
-
ரயிலில் மது பாட்டில் கடத்தியவர் கைது: திண்டுக்கல் வழியாக அதிகரிக்கும் கடத்தல்
-
பெண் மேலாளர் மரண வழக்கு: ஆதித்யா தாக்கரே மீது புதிய புகார்