அதிகரிக்கும் வெப்பத்தால் வேகமாக வற்றும் நீர்நிலைகள்; ஏரிகளை துார்வார அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நீர் நிலைகள் வேகமாக வற்றி வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் முன், நீர் மேலாண்மை திட்டங்கள் மற்றும் ஏரிகளில், அரசு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நிரம்பிய ஏரிகள்
தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு டிச.,ல் பெஞ்சல் புயலால் பெய்த கனமழையில், மாவட்டத்தின் பல பகுதிகளிலுள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. கடந்தாண்டு டிச., 5ம் தேதி கணக்கெடுப்பின் படி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அதிக பரப்பளவு கொண்ட, 74 ஏரிகளில், குப்பூர் குருமன குட்டை ஏரி, அதியமான்கோட்டை ஏரி, மாதேமங்கலம் ஏரி, வெள்ளோலை கோம்பைப்பள்ளம் ஏரி, தர்மபுரி ராமக்காள் ஏரி, அரூர் அடுத்த பையர்நாயக்கனஹள்ளி ஏரி, வீரப்பநாயக்கன்பட்டி முனியப்பன் கோவில் பள்ளம் ஏரி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் ஏரி, வாச்சாத்தி ஏரி, பாலக்கோடு அடுத்த அத்திமுட்லு குமாரசெட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி என, 11 ஏரிகள் நிரம்பின.
அதேபோல், தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 546 ஏரிகளில், 126 ஏரிகள் நிரம்பிய நிலையில், 166 ஏரிகளில், 10 சதவீதம் தண்ணீர் மட்டும் உள்ளது. 504 குளங்களில், 57 குளங்கள் நிரம்பிய நிலையில், 139 குளங்களில், 10 சதவீதம் தண்ணீர் மட்டும் இருந்தது.
தேவை நீர் மேலாண்மை
கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள, அணைகள், ஏரி, குளங்களில் தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், ஏப்., மே மாதத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதை கவனத்தில் கொண்டு, நீர் மேலாண்மை திட்டங்கள் மற்றும் குடிமராமத்து பணிகளை உடனடியாக மேற்கொள்ள, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர் மறந்து போன திட்டம்
எஸ்.வாசு, 55, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழக உழவர் முன்னணி, எக்காண்டஹள்ளி: மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி நீர் தேவையை, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, அழியாளம் அணைக்கட்டிலிருந்து, துாள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தின் மூலம், நிறைவேற்ற முடியும். இதில், 20க்கும் மேற்பட்ட வறண்டு கிடக்கும் ஏரிகளில் நீர் நிரப்ப முடியும். அதேபோல், பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள ஏரிகளை குடிமராமத்து பணிகள் செய்து தயார் செய்ய வேண்டும். இதனால், மழைக்காலங்களில் வரும் தண்ணீர் முழுவதையும் சேமிக்கலாம். இதில், கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், 2021 ஜன., 18 அன்று துாள்செட்டி ஏரியில், தி.மு.க., சார்பில் நடந்த கிராமசபை கூட்டத்தில், தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, 'நான் ஆட்சிக்கு வந்ததும், என்னுடைய முதல் பணி, துாள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவது' என்றார். ஆட்சிக்கு வந்தபின், முதல்வர் அத்திட்டம் குறித்து மறந்து விட்டார். மீண்டும் அடுத்தாண்டு நடக்கும் தேர்தலுக்கு வந்து, இதே திட்டம் குறித்து பேசுவதற்கு பதிலாக, திட்டத்தை நிறைவேற்றிய பின், மக்களிடம் வந்து ஓட்டு கேட்க வேண்டும். வெற்று அறிக்கையால் விவசாயிகளை ஏமாற்றக் கூடாது.
துார்வாருவது அவசியம்
கே.கந்தசாமி, 61, மாவட்ட தலைவர், சனத்குமார் ஆறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம், தர்மபுரி: மாவட்டத்தில், ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட எதுவும் கடந்த, 5 ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை. இதனால், மழை காலங்களில் வரும் தண்ணீரை சேகரிக்க முடியாத நிலையில், பணிகளில் மெத்தனமாக, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உள்ளது. பெஞ்சல் புயலால், ஒரு சில ஏரிகள் மட்டுமே நிரம்பின. அதில், உபரி நீர் வீணாக தென்பெண்ணை ஆற்றில் கலந்தது. நீரோடைகள், கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றி துார்வாரும் பணிகளை செய்யாததால், பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் போனது. தர்மபுரி மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் ஏரி, குளங்களை துார்வாரி, மழை காலத்தில், மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தர்மபுரி நகரில் ஓடும் சனத்குமார் ஆற்றை, துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும்
-
மீனவர்கள் பிரச்னைக்கு இரு தரப்பு மீனவ அமைப்புகள் பேச்சுவார்த்தை தேவை: அன்புமணி வலியுறுத்தல்
-
கொடிக்கம்பங்களை ஏப் 21ம் தேதிக்குள் அகற்றணும்; ஐகோர்ட் இறுதி கெடு
-
இளையராஜாவுக்கு பாராட்டு விழா; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
சிறப்பான தேர்தல் நடைமுறை; இந்தியாவை டிரம்ப் பாராட்டியது மகிழ்ச்சிக்குரிய விஷயம்: சசி தரூர்
-
லைசென்ஸ் பெறுவதற்காக பஸ் ஓட்டிக் காட்டிய திருச்சூர் கலெக்டர்; பாராட்டும் நெட்டிசன்கள்
-
கோடநாடு வழக்கு; வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை