லைசென்ஸ் பெறுவதற்காக பஸ் ஓட்டிக் காட்டிய திருச்சூர் கலெக்டர்; பாராட்டும் நெட்டிசன்கள்

6


திருச்சூர்: கேரளாவில் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் திருச்சூர் கலெக்டர் பஸ் ஓட்டிக் காண்பித்தார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அர்ஜூன் பாண்டியன். இவர் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதையொட்டி, பஸ்ஸை ஓட்டிக் காட்டுவதற்காக கலெக்டர் அர்ஜூன் பாண்டியனுக்கு அழைப்பு வந்தது.

அதன்பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் கலெக்டர் அர்ஜூன் பாண்டியன் பஸ்ஸை ஓட்டிக் காண்பித்தார். இது தொடர்பான வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இது வைரலான நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கலெக்டராக இருந்தாலும், போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு, பஸ்ஸை ஓட்டிக் காண்பித்து ஓட்டுநர் உரிமம் பெறுவது, மற்றவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணம் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.


யார் இந்த அர்ஜூன் பாண்டியன்?





இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் - உஷா குமாரி தம்பதியினரின் மகனாவார். இவர், திருவனந்தபுரம் கிளிமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். கொல்லத்தில் உள்ள டி.கே.எம்., பொறியியல் கல்லூரியில் பிடெக் பட்டம் பெற்றார். 2017 பேட்ச் கேரளா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாவார்.

தலைமை செயலக பணியாளர் அதிகாரி, தொழிலாளர் ஆணையர், கண்ணூர் உதவி அதிகாரி உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். 2019ல் ஒத்தப்பாலம் சப்-கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார்.

Advertisement