வளம்மிக்க முள் கிரீடமான தனிப்பிரிவு இன்ஸ்., பதவி

விழுப்புரம் மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது. 3 ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மீது புகார் காரணமாக, அவர் வேறு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, நெருக்கடியான தனி பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு எவரும் வர விரும்பாத நிலையில், பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். அவர் 3 மாதங்களை கடத்திவிட்டு, உடல் நிலையை காரணம் காட்டி மாறுதலாகி சென்று விட்டார்.

இதனையடுத்து, மீண்டும் பணியிடம் காலியாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, வளவனுார் இன்ஸ்பெக்டராக இருந்த விஜயகுமார், தனிப் பிரிவு இன்ஸ்பெக்டராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.

ஒரு மாதம் பணியாற்றி வந்த நிலையில், அவர் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தினர் கூறுகையில், தனி பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம், மாவட்டம் முழுதும் உள்ள காவல் நிலையங்களையும், காவலர்களையும் கண்காணித்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்த தகவல்களை அவ்வப்போது உயரதிகாரிகளுக்கு அளித்து, நிர்வாகத்தை மேற்கொள்ள உதவும் உளவு பணியை மேற்கொள்ள வேண்டும்.

திறமைக்கு ஏற்ப வருவாயுடன் கூடிய அதிகாரமான பதவி என்றாலும், 24 மணி நேரமும் கண்காணிப்பும், கள்ளச்சாராய சாவு போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது பெரிய நெருக்கடியையும் சந்தித்து சமாளிக்க வேண்டும். இந்த நெருக்கடிகளை சிலர் சந்தித்து சென்றிருக்கின்றனர்.

ஆனால், தற்போது நெருக்கடிக்கு பயந்து, பலரும் எஸ்கேப் ஆகின்றனர். கடைசியாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர், பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் மெத்தனால் குடித்து ஒருவர் இறந்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானதால், அந்த தகவலை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டனர். ஆனால், இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டார்.

முள் கிரீடமான, நெருக்கடி பணி என்பதால், இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாகவே இருக்கிறது.

Advertisement