மாஞ்சோலை தொழிலாளர்களின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடில்லி : திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில், தேயிலை தோட்ட ஒப்பந்தம் முடிந்ததை அடுத்து, அங்கு வசித்த தொழிலாளர்களை வெளியேற்றி விட்டு, அந்த பகுதியை மீண்டும் வனப்பகுதியாக மாற்றும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியது.

'தொழிலாளர்கள் கட்டாயமாக மாஞ்சோலை பகுதியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். அவர்களுக்கு உரிய மறுவாழ்வு திட்டத்தை ஏற்படுத்தி தர, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, மாஞ்சோலையை சேர்ந்தவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போது செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விபரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், 'மாஞ்சோலை புலிகள் வசிக்கக்கூடிய பகுதியாக இருப்பதால், அங்கு எப்படி மக்கள் வசிக்க அனுமதிக்க முடியும்' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

எனவே, இந்த விவகாரத்தில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படியும் நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி விக்கரம் நாத், சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியை மீண்டும் காப்புக் காடாக மாற்ற வேண்டும் என, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மிகவும் சரியானவை.

'யானைகள் வழித்தடமாகவும், புலிகள் நடமாடும் பகுதியாகவும் மாஞ்சோலை பகுதி இருந்த சூழலில், அதை மீண்டும் முழுமையான வனப்பகுதியாக மாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது' என்றார்.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement