செஞ்சி பகுதி தேர்வு மையங்களில் காப்பியடிக்கும் கலாசாரம் கல்வித்தரம் குறைவதால் பொது மக்கள் அதிருப்தி
பொது தேர்வு மையங்களில் கட்டுப்பாடின்றி மாணவர்கள் காப்பியடிக்க உதவி வருவதால் நன்றாக படிக்கும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதுடன், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக செஞ்சி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை இப்பகுதியில் கல்வியின் தரமும், தேர்ச்சி விகிதமும் மிக குறைவாக இருந்தது.
புதிய பள்ளிகளின் வருகையாலும் பொது மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வாலும் போராட்டங்களுக்கிடையே கல்வியின் தரம் உயர்ந்தது. போட்டி தேர்வுகளில் செஞ்சி மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பிடித்தனர். நீட், ஜே.இ.இ., தேர்வுகளிலும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையை கடந்த 3 ஆண்டுகளில் காப்பியடிக்கும் கலாசாரத்தின் மூலம் உடைத்தெறிந்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் செஞ்சியில் பொது தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுதிய மாணவர்கள் காப்பியடிக்க பள்ளி நிர்வாகமும் முழு வீச்சில் உதவியது.
தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், அறை மேற்பார்வையாளர்களை கவனித்து, அவர்களை கொண்டே மாணவர்கள் காப்பியடிக்க உதவி உள்ளனர். இதற்கு ஒத்துழைக்காத ஆசிரியர்களை தங்களின் செல்வாக்கினால் வேறு மையங்களுக்கு மாற்றினர்.
இதற்கான செலவு தொகையை மையத்தில் தேர்வு எழுதிய மற்ற பள்ளி நிர்வாகத்தினரிடம் வசூலித்தனர். இந்த கலாசாரம் இந்த ஆண்டு எல்லா மையங்களுக்கும் பரவியுள்ளது.
காப்பியடிக்கும் மாணவர்களுக்கு உதவ ஒரு குழுவே உருவாகியுள்ளது. இந்த குழுவில் உள்ளவர்கள் நினைத்த நேரம் தேர்வு மையங்களுக்குள் சென்று வர வசதியாக ஏதேனும் ஒரு குறுக்கு வழியை கையாளுகின்றனர். இந்த குழுவினர் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு காப்பியடிக்க புத்தகங்களை மினி ஜெராக்ஸ் எடுத்து தேர்வு அறைக்கே சென்று கொடுக்கின்றனர். சில மையங்களில் ஒரு மதிப்பெண் கேள்விக்கான விடையை குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் ஒவ்வொரு அறைக்கும் சென்று விடையை படித்துள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்ட வேண்டும் என்பதற்காக மையங்களுக்கு செல்லும் அலுவலர்கள் காப்பியடிப்பதை கண்டும் காணாமல் வர வேண்டும் என்ற மறைமுக உத்தரவே இதற்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இரவு பகலாக கண்விழித்து படித்து தேர்வு எழுத வந்த மாணவர்கள், அருகில் அனைத்து வசதியுடன் காப்பியடிக்கும் மாணவர்களை பார்த்து தேர்வு எழுதும் போதே வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
நம்பிக்கை தகர்ந்து போன மாணவர்கள் சிலர் தேர்வு முடிந்தது வீட்டிற்கு சென்று கதறி அழுதுள்ளனர். நல்ல மாணவர்களின் மன உறுதி இந்த காப்பியடிக்கும் கலாசாரம் குலைத்துள்ளது.
கடந்த 21ம் தேதி கல்வித்துறை இணை இயக்குனர் செஞ்சி பகுதி தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினார்.
அப்போது தேர்வு மையத்தில் சேகரித்து வைத்திருந்த பிட் பேப்பர்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் வந்ததால், மாணவர்களிடம் இருந்து பிட் பேப்பர்களை பறிமுதல் செய்திருந்தனர்.
இல்லையெனில் எந்த கெடுபிடியும் இருந்திருக்காது. அவர் மையத்தில் இருந்து சென்ற பின் சில வினாடிகளில் வழக்கம் போல் காப்பியடிக்க விட்டுள்ளனர். இது போல் அதிகரித்து வரும் காப்பியடிக்கும் கலாசாரத்தினால் செஞ்சி பகுதியின் கல்வி தரம் குறைந்து வருகிறது. இதனால் பொது தேர்வின் அடிப்படை தத்துவம் தகர்ந்துள்ளது.
அடுத்து வரும் மாணவர்கள் படிப்பின் மீது நம்பிக்கை வைக்காமல், காப்பியடிக்க முடியும் என்ற தவறான கருத்தை பதிவு செய்துள்ளது. காப்பியடிப்பதால் தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும், மாணவர்கள் அரசின் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினமாகிவிடும்.
கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த அவலமான நிலை செஞ்சி பகுதியில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
நீட் தேர்வால் 19 பேர் உயிரிழப்புக்கு முதல்வர் பதில் என்ன: கேட்கிறார் இ.பி.எஸ்.,
-
புதிய தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்: அன்புமணி கேள்வி
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 16 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சி; எக்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
-
உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை