2026 தேர்தலுக்கு வேட்பாளரை அறிவிக்கும் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் அதிருப்தி

முதல்வர் பிறந்தநாள் விழாவில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசுவதால் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டிவனம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நடைபெறும் கூட்டத்தில், தி.மு.க., மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தி.மு.க., அரசின் சாதனைகள் மற்றும் முதல்வர் பிறந்தநாள் குறித்து பேசாமல், வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திண்டிவனம் தொகுதி வேட்பாளராக மரக்காணத்தைச் சேர்ந்த ஒருவரை முன்னிறுத்தி தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ளார்.

அவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசி வருகின்றனர். வேட்பாளர் யார் என கட்சித் தலைமை அறிவிக்காத நிலையில் ஒருவர் பெயரை குறிப்பிட்டு அவர்தான் வேட்பாளர் என மேடையில் பேசி வருவது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒலக்கூர் சேர்மன் சொக்கலிங்கம், மரக்காணம் துணை சேர்மன் பழனி ஆகியோர் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட தலைமையிடம் சீட் கேட்டு வருவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே கூட்டணி கட்சியான வி.சி.,க்கு திண்டிவனம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என தி.மு.க., தலைமையிடம் வி.சி., தலைமை கேட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் தி.மு.க., நிர்வாகிகள் வேட்பாளரை அறிவித்து பேசுவது தி.மு.க., கட்சியினரிடையே மட்டுமின்றி கூட்டணி கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement