மொபைல் போனை பறித்த தாய் 15 வயது சிறுமி தற்கொலை

பீதர்: பீதர் மாவட்டம், கமல் நகரை சேர்ந்த தம்பதியின் 15 வயதான மகள், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்நேரமும் தாயின் மொபைல் போனை வைத்து கொண்டு, சாப்பிட கூட நேரமின்றி பொழுதை வீணாக்கி வந்தார்.

மொபைல் போன் பார்க்க வேண்டாம் என்று தாயார் பலமுறை கூறியும் கேட்கவில்லை. நேற்றும் ஹாலில் அமர்ந்திருந்த மகளிடம், மொபைல் போன் பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் அவரோ, அதை கேட்கவில்லை. இதனால் எரிச்சலடைந்த தாய், மகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக மொபைல் போனை பறித்து கொண்டார்.

இதனால் கோபமடைந்த சிறுமி, வீட்டில் தனது அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். சமையல் அறையில் இருந்த தாயார், இதை கவனிக்கவில்லை. சமையல் வேலை முடித்து வந்து பார்த்த போது, ஹாலில் மகள் இல்லை. மகளின் அறையில் பலமுறை தட்டியும் திறக்கவில்லை.

அக்கம் பக்கத்தினரை வரவழைத்து கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, மின் விசிறியில் மகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கமல் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement