பண்டகேவுக்கும் வாய்ப்பு கொடுங்கப்பா...! ஆர்.சி.பி.,க்கு ரசிகர்கள் கோரிக்கை

ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் 18வது சீசன் போட்டிகள், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த 22 ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இதுவரை நடந்த 17 சீசன்களில், ஆர்.சி.பி., எனும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை கோப்பையை கைப்பற்றியது இல்லை. இம்முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் அந்த அணியின் வீரர்கள் உள்ளனர்.

அணியின் பெயரில் பெங்களூரு என்று இருந்தாலும், கர்நாடக வீரர்கள் இரண்டு பேர் மட்டுமே அந்த அணியில் உள்ளனர்.

ஒருவர் தேவதத் படிக்கல். இன்னொருவர் மனோஜ் பண்டகே, 26. இவர், வட மாவட்டமான ராய்ச்சூரை சேர்ந்தவர்.

இடது கை பேட்ஸ்மேன். வலது கை மிதமான வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

ஆல் ரவுண்டராக இருக்கும் இவர், உள்ளூர் போட்டிகளில் ஜொலித்து வருவதால், கடந்த 2023ல் பெங்களூரு அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால், ஆர்.சி.பி., ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். அணியில் இருப்பது இரண்டு கர்நாடக வீரர்கள் தான்.

அவர்களின் தேவதத் படிக்கலுக்கு மட்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. மனோஜ் பண்டகே திறமையான ஆல் ரவுண்டர். அவரை 11 பேர் அணியில் சேர்த்து தொடர்ந்து விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

அவர், வட மாவட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு கிரிக்கெட்டில் முன்னேறி வருகிறார்.

மனோஜிக்கு வாய்ப்பு கொடுத்து அவரை சிறந்த வீரராக உருவெடுக்க வைப்பதன் மூலம், வட மாவட்டங்களில் இருந்து இன்னும் நிறைய வீரர்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.


கர்நாடக கிரிக்கெட் வீரர்கள் திறமையை வெளிக் கொண்டு வரும் வகையில், ஆர்.சி.பி., நிர்வாகம் இவர்களுக்கு விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வழியாகவும் கோரிக்கை வைத்துஉள்ளனர்

- -நமது நிருபர் -.

Advertisement