நீட் தேர்வு ரத்து ரகசியம் குறித்து கேட்டால் உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடும் உதயநிதி: ஆர்.பி.உதயகுமார் கிண்டல்

மதுரை : ''நீட் தேர்வு ரத்து ரகசியத்தை துணை முதல்வர் உதயநிதியிடம் கேட்டால் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடுகிறார்,'' என, மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கிண்டலடித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் நீட் விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டு மசோதாவை சட்டசபையில் அப்போதைய முதல்வர் பழனிசாமி நிறைவேற்றினார். நான்கரை ஆண்டுகள் ஆளுமை மிக்கத்தலைவராக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை வெளியிடவில்லை. இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதியிடம் கேட்டால் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டை விட வேகமாகஓடுகிறார். தற்போது 3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவி தேவதர்ஷினி தற்கொலை செய்து கொண்டார். நீட் ரத்து குறித்து மத்திய அரசை கேட்கவேண்டும் என்கின்றனர். இதன் மூலம் மக்கள்நம்பிக்கையை தமிழக ஆட்சியாளர்கள் இழந்துள்ளனர். 'சட்டசபையில் என் பேச்சுகளை எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும் கேட்பதில்லை' எனஉதயநிதி கூறுகிறார்.

உசிலம்பட்டி ஏட்டு முத்துக்குமார் மரணத்திற்கு நீதி கேட்ட எங்களை முதல்வர் ஸ்டாலின்வெளியேற்றினார்.

யார் முதல்வர் என்ற கருத்து கணிப்பு முக்கியமா. நான்கரை ஆண்டுகளில் பல்வேறு சாதனைத்திட்டங்களை நிறைவேற்றிய பழனிசாமி தான் மக்கள் மனதில் முதலிடத்தில் உள்ளார்.

நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதியை பெற 39 எம்.பி.,க்களும் பார்லியில் போராடாமல் தமிழகத்தில் போராடுகின்றனர். கடலில் பேனா சிலை வைக்க நிதி ஒதுக்கும் ஸ்டாலின் அதை 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்கலாமே.

தமிழகத்தில் இத்திட்டத்தில் கணக்கு சரியில்லை என மத்திய அரசு கூறுகிறது. தப்பு கணக்காக செயல்படும் இந்த அரசால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி மட்டுமல்ல தமிழகத்திற்கான எந்த நிதியை பெற்று தரவும் யோக்கியதை இல்லை.

மாதம் ஒரு முறை மின்கட்டணம் என்றனர். அத்துறை அமைச்சரோ 6 மாதம் ஜெயிலிலும், 6 மாதம் அமைச்சர் பதவியிலும் உள்ளார் என்றார்.

Advertisement