தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட  இருவருக்கு காலில் 'மாவுக்கட்டு'

1

கோவை: கோவை மாநகர பகுதிகளில் தொடர் செயின் மற்றும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாநகரில் சமீப காலமாக செயின் பறிப்பு மற்றும் இரு சக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் 3 தனிப்படைகள் அமைத்தார்.

தனிப்படை போலீசார், திருட்டு சம்பவங்கள் நடந்த இடங்களில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போது, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உக்கடம், ஜி.எம். நகரை சேர்ந்த சபீல் 19 மற்றும் சம்வர்தன், 19 ஆகியோர் என்பது தெரியவந்தது.

இருவரும் சேர்ந்து, பல்வேறு இடங்களில் இருந்து 3 இரு சக்கர வாகனங்களை திருடிச்சென்றுள்ளனர். அந்த வாகனங்களை வைத்து, ஆறு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், சபீல் மற்றும் சம்வர்தன் ஆகியோர் சரவணம்பட்டி, கீரணத்தம் சாலையில் மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரை பார்த்தவுடன், அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றனர்.

அப்போது, அதிவேகமாக சென்றதால் இருவரும் கீழே விழுந்து, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து, 49 கிராம் தங்கம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement