காங்., நிர்வாகியை 'கவனித்த' இன்ஸ்.,சை கண்டித்து முற்றுகை

அரியாங்குப்பம்:புதுச்சேரியில் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஸ்டேஷனை முற்றுகையிட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்., கட்சியினர் 103 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பத்தில் மார்ச் 27ல் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய, அதே பகுதி ஆனந்த், பாலா, சம்பத் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனிடம், மூவர் மீதும் வழக்கு பதிய வேண்டாம் என, ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க மாநில தலைவர் அமுதரசன் கூறினார்.
போலீசார், மறுநாள் வழக்கு பதிந்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.
ஸ்டேஷனுக்கு வந்த அமுதரசன், இன்ஸ்பெக்டரை பார்த்து, 'என்ன தல... நான் பேசியும் இப்படி பண்ணீட்டீங்க' என்றதும், ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், அமுதரசனை தாக்கினார்.
இதை கண்டித்து காங்., கட்சியினர் நேற்று காலை, 10:30 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உட்பட 300 பேர் அரியாங்குப்பம் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிந்து பணி நீக்க வேண்டும் என, கோஷமிட்டனர்.
போலீசார் நாராயணசாமி உட்பட 103 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டத்தால், கடலுார் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



