ஆன்லைன் ரம்மியில் இழப்பு வங்கி மேலாளர் தற்கொலை

நாமக்கல்:திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் ஜெயகுமார், 33; இவர், திருப்பூர் மாவட்டம், முத்துாரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி கிளை உதவி மேலாளர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான ஜெயகுமார், அதில், 10 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். இதையடுத்து மனைவியிடம், 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த நெய்க்காரன்பட்டி அருகே கோவில்பட்டி அவரது தந்தை பிறந்த ஊர். நேற்று முன்தினம் அங்கு வந்தவர், மாலை, 3:00 மணிக்கு, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த முதியவர் தடுத்து, அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று மாலை, 3:00 மணிக்கு, தன், 'ஹோண்டா பேஷன் புரோ' டூ-வீலரில், நெய்க்காரன்பட்டி, பாண்டியன் நகர் ரயில்வே தண்டவாளத்திற்கு சென்ற ஜெயகுமார், சேலம் - மயிலாடுதுறை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதில், அவரது உடல் இரண்டு துண்டானது.

சேலம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றினர். மோகனுார் போலீசாரும் விசாரணை நடத்தினர்.

Advertisement