ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி: 19 வயது வீரரிடம் வீழ்ந்தார்

மயாமி: அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.


ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-5' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 'நம்பர்-54' செக்குடியரசின் ஜாகுப் மென்சிக் 19, மோதினர். மழையால் போட்டி ஐந்தரை மணி நேரம் தாமதமாக துவங்கியது.


இரண்டு மணி நேரம், 3 நிமிடம், 40 வினாடி நீடித்த பைனலில் ஏமாற்றிய ஜோகோவிச் 6-7, 6-7 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். ஏ.டி.பி., ஒற்றையரில், தனது 100வது பட்டம் வெல்லும் வாய்ப்பை ஜோகோவிச் நழுவவிட்டார்.

செக்குடியரசின் மென்சிக், தனது முதல் ஏ.டி.பி., ஒற்றையர் பட்டத்தை தட்டிச் சென்றார். ஏ.டி.பி., தரவரிசையில் 30 இடம் முன்னேறிய மென்சிக், 24வது இடத்தை கைப்பற்றினார். இவருக்கு, கோப்பையுடன், ரூ. 9.6 கோடி பரிசு வழங்கப்பட்டது. ஜோகோவிச், 5வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவருக்கு, ரூ. 5.1 கோடி பரிசாக அளிக்கப்பட்டது.
கண்ணில் பாதிப்பு: மயாமி ஓபனில் 6 முறை கோப்பை வென்ற ஜோகோவிச், பைனலில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பைனலுக்கு முன், ஜோகோவிச்சின் கண்ணில் பாதிப்பு உண்டானது. இதனால் போட்டியின் போது இரண்டு முறை, தனது கண்களுக்கு சொட்டு மருந்தை பயன்படுத்திக் கொண்டார். இது போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். தவிர, மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் இரண்டு முறை கீழே விழுந்தார் ஜோகோவிச்.

Advertisement