மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!

14

மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு துவங்கியது. கேரளா முதல்வர் பினராய் விஜயன், முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மதுரை தமுக்கம் மைதானத்தில், இன்று ( ஏப்.2) முதல் ஏப்.,6ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக்க சர்கார் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பிருந்தா காரத் துவக்கி வைத்தார்.


அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், கேரளா முதல்வர் பினராய் விஜயன், முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., பொது செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பிரகாஷ் காரத் பேசியதாவது:
பழந்தமிழ் இலக்கியம் மற்றும் கலாசாரத்தின் பண்பாட்டின் செழுமையும், எட்டு தசாப்தங்களுக்கும் மேலான தொழிலாளி வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றை ஒருங்கிணைக்கும் நகரமான மதுரையில் இந்த மாநாட்டை நடத்துவது பொருத்தமானது. இம்மாநாடு பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இல்லாத ஒரு கடினமான தருணத்தில் நடக்கிறது.


3 கேள்விகள்




மூன்று கேள்விகளைக் கேட்கிறேன் டொனால்டு டிரம்பின் நண்பர் என்று கூறுவது யார்? கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர் யார்? ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு யார் முழு விசுவாசம்? இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில் நரேந்திர மோடியும் பா.ஜ.,வும் தான். பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமாக இணைந்திருக்கும் இந்துத்துவா-கார்ப்பரேட் உறவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

பாரபட்சம்




பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., கூட்டணியை எவ்வாறு திறம்பட எதிர்த்துப் போராடுவது என்ற சிக்கலான கேள்வி எழுகிறது. கருத்தியல், கலாசார மற்றும் சமூகத் துறைகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தருணத்தில், பா.ஜ.,க்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும்.


பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு எந்திரத்தின் உதவியோடு இந்துத்துவா அமைப்புகளால் நடத்தப்படும் வகுப்புவாத வன்முறையின் மூலம் சிறுபான்மையினர் துன்புறுத்தபடுகிறார்கள். பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் அப்பட்டமான பாரபட்சம் உள்ளது. இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.


வரும் ஏப்.,7ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள், தீர்மானங்கள் நிறைவேற்றும் நிகழ்வுகளும் நடக்க இருக்கின்றன. நாடு முழுவதும் இருந்து ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் மதுரையில் குவிந்துள்ளனர்.

Advertisement