வரும் 15க்குள் நில விபரம் பதிவு செய்ய செங்கை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், வரும் 15ம் தேதிக்குள், நில விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என, வேளாண்மைத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி வெளியிட்ட அறிக்கை:

மத்திய, மாநில, அரசுகளின் பல்வேறு திட்டப் பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பெறும் வகையில், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க, தமிழகத்தில் வேளாண் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, விவசாயிகளின் பதிவு விபரங்களுடன் ஆதார் எண், மொபைல் எண் நில விபரங்கள் இணைக்கும் பணி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடந்து வருகிறது.

மாவட்டத்தில், 59 ஆயிரத்து 317 விவசாயிகளில், 32 ஆயிரத்து 493 விவசாயிகள், தங்கள் நில உடைமை விபரங்களை பதிவு செய்து உள்ளனர்.

இதில், 26 ஆயிரத்து 824 விவசாயிகள், தங்களது நில உடைமை விபரங்களை உடனே பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இதற்காக விவசாயிகள் தங்கள் கிராமங்களில், வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் அல்லது அருகில் உள்ள பொது சேவை மையங்களில், தங்களது நில உடைமை விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஏற்கனவே, நேற்று வரை பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டியிருந்த நிலையில், தற்போது வரும் 15ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வரும் நிதியாண்டு முதல் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டம், பயிர் காப்பீடு திட்டம் போன்ற மத்திய, மாநில அரசு திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன் பெற, மேற்கண்ட தேசிய அளவிலான அடையாள எண் மிகவும் அவசியம்.

எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்களது நில உடைமை விபரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும். மேலும், விபரங்களுக்கு, வட்டாரத்தில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை உதவி இயக்குநர், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள பொது சேவை மையங்களையும் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement